கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை…!

பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த பாடசாலை மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை (23.06.2024) மாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த மாணவன் உயிர் பிழைத்த சம்பவம் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கல்முனை நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய எஸ்.மிதுஷன் எனும் பாடசாலை மாணவன் நுங்கு பறிப்பதற்காக பனை மரத்தில் ஏறிய போது தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த இடத்தில் பயற்றை செடிக்கு நாட்டப்பட்டிருந்த கிளிசரீடியா மரத்தின் கம்பு (2 அடி நீளமும் 2 ½ அங்குல விட்டமும் உடையது) குறித்த இளைஞரின் குத வழியாக பாய்ந்து சலப்பை, ஈரல், நுரையீரல், பிரிமென்றகடு உட்பட உடலின் முக்கிய பாகங்களாக காணப்படுகின்ற 15 பாகங்களை கிழித்துக் கொண்டு மார்பக பக்கமாக குறித்த தடி வெளியில் தெரிந்துள்ளது.

இச் சத்திரசிகிச்சையினை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.டபுள்யூ.எம்.சமீம் மற்றும் மயக்கமருந்து வைத்திய நிபுணர் டொக்டர்.கே.சுதேஸ்வரி வைத்திய அதிகாரிகளான டொக்டர் ப(f)ஸ்மிர், டொக்டர் முக்சீத், டொக்டர் சிரோஷான், டொக்டர் வினுல தாதிய உத்தியோகத்தர்களான செல்வி.வர்சிதா, திருமதி.பி.நெத்திக்குமார, திரு.ஏ.என்.டீ.அல்விஸ், திருமதி.எஸ்.வேனுசா, திருமதி.எம்.யூ.ஐயர், செல்வி.ரீ.டிலக்சனா மற்றும் சுகாதார உதவியாளர்களான திரு.ஏ.எல்.ரிபா(f)ய் செரீப், திருமதி.எம்.கிருபாணந்தம் ஆகிய வைத்திய குழுவினரினால் மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.40 மணி வரை இந்த சத்திர சிகிச்சையானது (EM/ Laparotomy + Throcotomy + Colostomy) மேற்கொள்ளப்பட்டது.

இச்சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த இளைஞரின் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் இரண்டடி நீளமுடைய தடியினை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது குறித்த இளைஞன் ஆரோக்கியமான நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அதிதீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் தனது 25 வருட கால அறுவை சத்திர சிகிச்சை வரலாற்றில் இது ஒரு சவாலான அறுவை சிகிச்சை என குறிப்பிட்டுள்ளதுடன் இறைவன் உதவியால் இச்சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக செய்ய முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர்.ஏ.பீ.ஆர்.எஸ்.சந்திரசேன அவர்களினால் குறித்த அறுவை சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்