ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய நிருவாக கட்டட தொகுதி திறந்துவைப்பு!!
மட்டக்களப்பு திராய்மடுவில் 1055 மில்லியன் நிதி ஒதுக்கிட்டின் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மாவட்ட செயலக கட்டட தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடா வெட்டி உத்தியோக பூர்வமாக இன்று (22) திகதி திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வின் போது 20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் உறுமய தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் காணி உரிமம் அற்ற மக்களில் தகுதி பெற்ற 27,595 பேரில் முதற்கட்டமாக 192 பேருக்கு காணி உறுதிகள் ஜனாதிபதி அவர்களின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இதன் போது உயர் தேசிய பொறியியல் நிறுவனத்தின் 252 ஆங்கில டிப்ளோமாதாரர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களினால் ஆசிரியர் நியமனங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன்,
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.ஆத்தாவுல்லா, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி விக்ரமசிங்க, அதன் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன், புனரமைப்புப் பணிகளைப் பூர்த்தி செய்ய இலங்கை இராணுவத்தின் உடனடி உதவியை வழங்குமாறு இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பணிபுரை விடுத்தார்.











