இறக்காமம், நிந்தவூர், சாய்ந்தமருது பிரதேசங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு
பாறுக் ஷிஹான்
சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இன்று(19) அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது நிந்தவூர் இறக்காமம் பொலிஸ் நிலையங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையங்களில் அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 3 பொலிஸ் நிலையங்களில் இப்பணியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , உட்பட சர்வமத தலைவர்கள், மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பொலிஸ் சேவையில் நீண்ட கால அனுபவம் கொண்டவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எஸ்.எல்.சம்சுதீனின் நன்றியுரையுடன் குறித்த நிகழ்வகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.











