கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, இந்துமாமன்ற கட்டடத்தில் நேற்று (17) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவலை தெரிவித்திருந்தார்.

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு ஏற்கனவே இம்மாதம் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் திடீரென அத்திகதியில் மாற்றம் ஏற்பட்டு அடுத்த மாதம் 02ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது.

இதனால் குழப்பமடைந்த யாழ்ப்பாணம் தொடக்கம் கிழக்கு மாகாணம் வரையுள்ள பாதயாத்திரிகர்களும் பொது அமைப்புக்களும் ரெலோ அமைப்பினர் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்த அடைக்கலம் செல்வநாதன் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உரிய அமைச்சர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறினார்.
இதன் அடிப்படையில் உரிய திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இம்மாதம் 30 ஆம் திகதி கதவு திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநரும் உரிய அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் கௌரவ ஆளுநர் அல்லது மாவட்ட அரசாங்க அதிபர் மூலம் வெளியிடப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.