(வி.ரி.சகாதேவராஜா)

ஊரே கதறியழ நேற்று(15) சனிக்கிழமை உலகுக்கு விடைகொடுத்த மாணவன்  அக்சயனின் இறுதி யாத்திரை அனைவரதும் மனங்களை நெகிழச்செய்தது.

அழுகுரலால் அவருடைய வீடு மட்டுமல்ல அப்பிரதேசமே அதிர்ந்தது. சோகம் ததும்பியது.

காரைதீவைச் சேர்ந்த  சிவகரன் அக்சயன்( வயது 20) என்ற மாணவன் நேற்றுமுன்தினம் (14) வெள்ளிக்கிழமை காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தமை தெரிந்ததே.

சிவகரன் ஜீவரஞ்சனி தம்பதியினரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் என்பதும்

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை வரும்பொழுது பொத்துவில்  லாகுகலை  நீலகிரி ஆற்றிலே நீராடிய போது மூழ்கி மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைதீவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பூதவுடலுக்கு  நேற்று சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள் மாணவர்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நீண்ட இரங்கல் நிகழ்வும் நடைபெற்றது

இறுதியில் காலை 10.30 மணியளவில் இறுதி யாத்திரை நடைபெற்று காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவ துறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி இறைபதமடைந்த செய்தி காட்டுதீபோல் பரவியது . முழுக் காரைதீவு பிரதேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது.