தாய் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து குளிர்களுக்கும் பனிகளுக்கும் மத்தியில் கடின உழைப்பை மேற்கொள்ளும் உறவுகள் பலர், தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால் போதாது ஏழ்மையில் வாடும் தேவையுள்ளவர்களை, தாயகத்தில் தேடி தேடி உதவி செய்யும் நல்லுள்ளம் கொண்டவர்களாகவும் பலர் புலத்தின், பல தேசங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்கள்.
அந்த வகையில் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசிக்கும் விஜயகுமாரன், அவரது குடும்பம், விஜயகுமாரனின் நண்பர்கள் வட்டத்தின் சமூக சேவையையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
தாயகத்தில் இல்லாவிட்டாலும், புலத்தில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை இலங்கையின் பல இடங்களில் , பல வருடங்களாக செய்து வருகின்றவர்களில் ஒருவர் இரா.விஜயகுமாரன். கல்விக்கு உதவுதல் இவரின் உதவிகளின் முக்கிய நோக்கமாக இருந்தாலும் அனைவருக்கும் அவசியமான இருப்பிடத்தை அமைத்துக்கொடுக்கும் பணிகளையும் பரவலாக செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
சுமார் 18 வீடுகள் இவர் ஊடாக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல வீடுகளுக்கான நிதிகள் இவரது இப்பணிகளுக்கு பக்கபலமாக இருக்கும் இவரது மனைவி திருமதி விஜயகுமாரன் குபேரலெட்சுமி, இவரின் பிள்ளைகளின்
நிதியில் அமைக்கப்பட்டதுடன் மாத்திரமல்லாது, இவரைப்போன்ற உதவும் உள்ளம் கொண்ட விஜயகுமாரனின் நண்பர்களின் நிதிப்பங்களிப்பு ஊடாகவும் அவர்களையும் தூண்டி வீடுகள் ஏனைய உதவிகளையும் செய்து வருகின்றமை வரவேற்கத்தக்கதே.
இந்த செய்திகளை குறிப்பிடுவதன் காரணம்
தங்களுக்கு கிடைக்கும் விடுமுறைகளை உல்லாசமான சுற்றுலாவுக்கு மட்டும் பயன்படுத்தாமல் அதிக நேரத்தை தாயகத்துக்கு வருகை தந்து தேடி தேடி உதவி செய்வதில் நேரங்களையும் பணத்தையும் செலவு செய்து திருப்தி காணும் விஜயகுமாரன் வழமை போன்று கடந்த வாரம் இலங்கைக்கு இரு வாரம் வந்திருந்தார். அப்போது அவரோடு இணைந்து உதவிகளை செய்த அவரது உறவினரான சுரேஸ் , மற்றும் தன்னிடம் சமயல் கலை பயின்ற சுவிஸ்நாட்டு இளையவர்களான Fabio,Vannesa ஆகியோரும் வருகை தந்திருந்தார்கள்.
விஜயகுமாரன் தனது தனிப்பட்ட நிதி பங்களிப்பில் உதவி கிடைத்த உறவுக
ளையும் கூடவே வந்த இந்த நண்பர்களின் உதவி கிடைத்த உறவுகளையும் தேடிச் சென்று பார்வையிட்டதுடன் மேலும் சில மனித நேய உதவிகளையும் செய்திருந்தனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பளவெளி கிராமத்தில் குடி நீர் இணைப்புக்கள். ஏற்கனவே வந்தாறு மூலையிலும், இறக்காமத்திலும் அமைக்கப்பட்ட வீடுகளுக்கான பயனாளிகளின் தற்போதைய நிலை தொடர்பாகவும் சந்தித்து உதவியமை சொறிக்கல்முனையில் மக்கள் ஒன்று கூடல் மண்டபம் அமைத்துக்கொடுத்தமை, நாவிதன்வெளியில் பாலர் பாடசாலைக்கட்டிடத்துக்கு கல் வைத்தமை, தாந்தாமலை நாப்பதாம் வட்டை விபுலாநந்த வித்தியாலயத்திற்கான உதவி மற்றும் அவசர உதவி தேவையுடைய பலரையும் ஏதேச்சையாக பார்வையிட்டபோது சிறு சிறு உதவிகளை செய்தமை என பட்டியலிடலாம்.
இது கடந்த வாரம் பயணித்த குறுகிய நாட்களில் செய்யப்பட்ட பணிகள் . பல வருடங்களாக முன்னெடுத்து வரும் உதவிகளை பட்டியலிட்டால் அவை நீண்டு செல்லும்.
இவ்வாறான உதவும் உள்ளங்களின் பணிகளை நாம் பாராட்டுவதானது எமது கடமை என்பதுடன் இவர் போன்ற உதவும் ஏனைய உள்ளங்களையும் உற்சாகப்படுத்தும் என்பதே எமது நோக்கம். கடந்த வாரம் இவர்களின் சமூகப்பணிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் , மற்றும் பாண்டிருப்பு மஹா விஸ்ணு ஆலய நிருவாகத்தினர் பொன்னாடை போர்த்தி, இநினைவுச் சின்னம் வழங்கி இவர்களை கௌரவித்திருந்தனர்.
இது ஒரு சிறந்த விடயம் வேறு நாட்டவரும் எம்மவருடன் கை கோர்த்து உதவும் போது அவர்களை மகிழ்வித்து மதிப்பளிப்பது எமது பண்பாகும்.
சமத்துவ மக்கள் நல ஒன்றியம் , தமிழ் இளைஞர் சேனை, மாணவர் மீட்பு பேரவை, வளைகுடா வானம்பாடிகள், கருணை உள்ளம் என பல மனிதநேயப்பணிகள் செய்யும் பொது அமைப்புக்களிலும் முக்கிய பொறுப்புக்களில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.