கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்; DIG இடம் முறையிட நடவடிக்கை?
கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கல்முனை நகர் பாரிய வெள்ள அனர்த்தங்களுக்கு உட்படுகின்ற நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
நகரில் உள்ள வடிகான்கள் மற்றும் நீர் தேங்கும் தாழ்நில பிரதேசங்களை சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை முன்னெடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கல்முனை 1C கிராம சேவகர் பிரிவில் வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றை சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கையை கல்முனை மாநகர சபை முன்னெடுத்துள்ளது.
இக்காணி தொடர்பாக கல்முனைப் பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கு கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் காணிக்குள் அத்துமீறி பிரவேசித்து அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி இது தொடர்பாக முறைப்பாடு மேற்கொள்ள செல்கின்ற அரச உத்தியோகத்தர்களைக்கூட அநாகரிகமாக கல்முனை பொலீசார் நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இது தொடர்பான முறைப்பாட்டை D.I.G. அலுவலகத்தில் குறித்த உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிய முடிகின்றது.
குறித்த காணி தொடர்பில் கரையோர பாதுகாப்பு அலுவலகம் (CCD) மற்றும் கல்முனை பொலிசார் காட்டுகின்ற அசட்டை ஈனங்கள் தொடர்பாக அனர்த்த முகாமத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதி மட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது