கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான தொடர் போராட்டத்தை மறைக்க ஒரு வழிப்போக்குவரத்து பாதையில் மாற்றம்? பின்னணியில் யார்?
கல்முனை டிப்போ சந்தி தொடக்கம் பொலிஸ் நிலைய சுற்று வட்டப் பாதை வரையான ஒரு வழி போக்குவரத்து பாதையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை நகரில் இருந்து வடக்கு நோக்கி வெளியேறுகின்ற வழமையான இலங்கை வங்கி பாதையூடான போக்குவரத்து பாதைக்கு பதிலாக பொலிஸ் நிலையத்திலிருந்து சம்பத் வங்கி ஊடாக செல்கின்ற பாதையை பயன்படுத்தி பிரதான வீதியை அடைந்து அதன் ஊடாக நகரில் இருந்து வடக்கு நோக்கி வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஏற்படுத்தப்படுகின்ற அத்துமீறல்களை எதிர்த்து அதன் முன்பாக 58 நாட்களாக தொடர்ந்து மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த பாதை ஊடான போக்குவரத்தை மட்டுப்படுத்த கோரி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் பொலிஸாருக்கு முன்வைக்கப்படுள்ள கோரிக்கையினை அடுத்து மேற்படி நடவடிக்கைகள் இடம் பெற இருப்பதாக அறியமுடிகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது நேரடியாக அத்துமீறல்களை மேற்கொள்கின்ற கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அவருடைய பணிக்குளாம் மேற்படி பாதையை பயன்படுத்துவதை தவிர்க்கும் முகமாகவும் இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் நோக்குடனும் குறித்த பாராளுமன்ற உறுப்பினரால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
கல்முனையில் சட்டம் ஒழுங்குகளில் சில அரசியல்வாதிகள் அழுத்தங்களை பிரயோகித்து தங்களுக்கு ஏற்றால் போல் மாற்றங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்கனவே பலமுறை பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற நிலையில், ஒரு வழிப்பாதை போக்குவரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் கல்முனையில் சட்ட ஒழுங்குகள் குறிப்பிட்ட ஒரு சில அரசியல்வாதிகளின் கைகளில் இருப்பது என்பது உண்மை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறாயினும் இச்செய்தியை உத்தியோபூர்வமாக ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது