தொழிலாளர் தினத்தில் பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் அமைப்பினால் சேவையாளர்கள் கௌரவிப்பு.
” மே 1 ” சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு, சமூகத்துக்காக சேவை ஆற்றிவரும் சிலரை கௌரவித்தனர். இந் நிகழ்வு பெரியநீலாவணை கமு/ விஷ்ணு மஹா வித்யாலயத்தில் (01) இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில் பெரிய நீலாவணை இந்து மயானத்தில் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் அனுசரணையுடன் ரூபாய் 20 லட்சம், தமது சொந்த நிதியை பயன்படுத்தி “அமரர் நவரெட்ணம் இறுதி அஞ்சலி மண்டபம்” ஒன்றினை அமைத்தவரும், பல்வேறுபட்ட சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி செயல்பட்டு வரும் நெக்ஸ்ட் ரெப் அமைப்பின் உப தலைவரும், மின்சாரசபை ஊளியருமான நவரெட்ணம் ருக்மாங்கதன்(கஜன்), நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும், ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளருமான கண. வரதராஜன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு சேனைக் குடியிருப்பு, மணல் சேனை, பாண்டிருப்பு, ஆகிய கிராமங்களில் சிறப்பாக அறநெறி கல்வியை மாணவர்கள் மத்தியில் முன்னெடுத்து வரும் ஆசிரியர்களுக்கும், பெரிய நீலாவணையில் முன்பள்ளி பாலர் பாடசாலையில் சிறந்த சேவையினை செய்து வருகின்ற இரண்டு முன் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கும் பட்டாடை வழங்கி அவர்களையும் கௌரவித்திருந்தனர்.
சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்து சேவை செய்பவர்களை அவர்கள் வாழும் காலத்திலே பாராட்ட வேண்டியதும் கௌரவிக்க வேண்டியதும் சமூகத்தின் பொறுப்பாகும். அந்த வகையில் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு இது போன்ற நிகழ்வுகளை இதற்கு முன்னரும் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வுக்கான நிதி அனுசரணையினை நெக்ஸ்ட் அமைப்புக்கு தொடர்ச்சியாக தமது நிதி பங்களிப்பினை செய்து வருகின்ற நவரெட்ணம் ருக்மாங்கதன்(கஜன்) அவர்களும் அவர்களது தாயார் திருமதி நவரெட்ணம் விஜயலட்சுமி (ஒய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர்) அவர்களும் வழங்கியிருந்தனர். பல கல்வியியலாளர்களும் திருக்கோயில் சேவல் கொடியோன் அமைப்பு சேர்ந்த பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.












