கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி போராட்டம் ஒரு மாதம் கடந்து தொடர்கிறது – தமிழ் , சிங்கள மக்கள் நாடளாவிய ரீதியில் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும்
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக
இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 31 வது நாளாக ஒரு மாதத்தை கடந்து தொடர்கின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வரும் கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் காலை முதல் கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வடக்கு பிரதேச முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிலர் கருத்து தெரிவிக்கையில் தாம் தொடர்ச்சியாக 31வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இருந்தபோதிலும் இதனுடன் நேரடியாக தொடர்புபட்ட அம்பாறை மாவட்ட அரச அதிபர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
1993 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான முழுமையான அதிகாரங்கள் கிடைக்கப்பெறும் வரையும் வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தெற்கு பிரதேச செயலாளரின் அத்துமீறல்கள் நிறுத்தப்படும் வரையும் தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்திருந்தனர்.
கடந்த மார்ச் மாதம் 25 ம் திகதி முதல் இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருவதுடன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குரிய நிதி செயற்பாடுகள் மற்றும் காணி அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து இப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.