மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்
(அரவி வேதநாயகம்)
மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையே செயற்படும் தேவதூதர்களென கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் (எஸ்.எப்.சீ) தெரிவித்தார்.
கார்மேல் பாற்றிமா கல்லூரி பெண்கள் பிரிவில் நேற்று (02) இடம்பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் கனிஷ்ட மாணவ தலைவர்களை நியமிக்கின்ற மற்றும் தமது கடமைக் காலத்தை நிறைவுசெய்த கனிஷ்ட மாணவ தலைவர்களுக்கு சான்றிதழ், நினைவு பதக்கங்களை வழங்குகின்ற நிகழ்வில் உரையாற்றும்போதே கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் (எஸ்.எப்.சீ) மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மாணவர் தலைவராவதென்பது ஒரு அழைப்பு. அது அதிகாரத்தை சக மாணவர்கள்மீது செலுத்துவல்ல மாறாக தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு தன்னோடு பயணிக்கின்ற சக மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து கடமைகளை சுயமாக ஏற்று நல்ல விழுமியங்களை தானும் கற்று தன்னோடு பயணிக்கின்றோருக்கும் அவற்றைக் கொடுத்து கீழ்ப்படிவென்ற புனிதத்தை கடைக்கொண்டு ஏனைய பிள்ளைகளோடு இணைந்ததாக சகிப்புத்தன்மை, பொறுமை என்பவற்றை வளர்த்தெடுக்கின்ற பணிகளே மாணவ தலைவர்களது பணிகளாகும்.
அரசியல்வாதிகளாக, சமயத் தலைவர்களாக, திணைக்களங்களங்களின் தலைவர்களாகவென யாராக இருந்தாலும் அவர்கள் சார்ந்தவற்றை வளர்த்தெடுக்க அதிகாரத்தைகொண்டு அடக்கி, அளவிற்குமிஞ்சிய சுமையைகொடுத்து அதிலே மகிழ்ச்சி காண்கிறார்கள். இது உலகிலுள்ள ஒருவகையான தலமைத்துவம். இன்னுமோர் தலமைத்துவம் உண்டு. அது கிறிஸ்த்து காட்டிய தலமைத்துவம் “The Server Leadership”. யாராவது உயர் பதவியை விரும்பினால், அதிகாரத்தில் இருக்க விரும்பினால், எல்லொருக்கும் முதல்வனாக இருக்க விரும்பினால் எல்லோருக்கும் கடையவனாக, பணிவிடை புரிபவனாக, தன்னைத் தாழ்த்திக்கிக் கொள்பவனாக, அர்ப்பணிப்பவனாக இருக்கவேண்டும். ஆக நல்ல தலைவனுக்கு இருக்கவேண்டிய முக்கியமான பண்புகள் பணிவும் துணிவும் ஆகும். சரியான இடத்தில் சரியான நேரத்தில் இவற்றை பயன்படுத்துபவன் தலைவனாகின்றான்.
இந்த கல்லூரி வெறும் பாடத்திட்டங்களை மட்டும் கற்றுக்கொடுக்கின்ற பாடசாலை அல்ல. அதைவிட இறைவன், எங்களுடைய கல்லூரி கீதத்திலே அழகாக சொல்லப்பட்டிருக்கிறது “இந்த கல்லூரி இறையருளிலே ஒளிர்க” என. அதேபோல ஒழுக்கத்தை, ஆன்மீகத்தை, சுயகட்டுப்பாட்டை, தன்னையும் தன்னோடு பயணிப்போரையும் நேசிக்கின்ற, சமூகத்தை நேசிக்கின்ற, இயற்கையை நேசிக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற பிள்ளைகளை சமூகத்திற்கு வழங்குகின்ற விலைமதிக்கமுடியாத பணியை செய்கின்றது.
எனவே, அன்பார்ந்த மாணவர்களே இந்தக்கல்லூரியின் மாணவ தலைவர்கள் நீங்கள். சமூகத்தில் ஒழுக்கசீலர்களாக மிளிரவேண்டுமென வாழ்த்துவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. திருமதி. எஸ். சதானந்தன், கௌரவ விருந்தினராக வைத்திய அதிகாரி வைத்திய. திருமதி. லகுஷியாமா கேஷாந், விசேட அதிதியாக அருட்சகோதரியும் ஓய்வுநிலை அதிபருமான எம். செல்வராணி (ஏ.சீ) ஆகியோர் கலந்துகொண்டதுடன் காரமேல் பற்றிமா கல்லூரி பெண்கள் பிரிவிற்கு பொறுப்பான பிரதி அதிபர் அருட்சகோதரி.எம்.பிரியஷாந்தி (ஏ.சீ) மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் ஏ.நிர்மலகுமார் (முகாமையார், எச்.என்.பி. கல்முனை), பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






























