இன்று காரைதீவில் கொட்டும் மழையிலும் களைகட்டிய சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா
( வி.ரி.சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 132வது ஜனன தின விழா இன்று (27) புதன்கிழமை கொட்டும் மழையிலும் காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஆலோசகர் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் மணிமண்டப வளாகத்தில் நடைபெற்றது.
முதல்கட்டமாக நந்திக் கொடி ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து துறவறகீதம் சரணாகதி பாடல் இசைக்கப்பட்டது.
பின்னர் சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல் இடம் பெற்றது.
பிறந்தவீட்டிலுள்ள திருவுருச்சிலைக்கு காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன், சுவாமி விபுலானந்த அடிகளாரின் பேத்தி திருமதி விஜயலக்ஷ்மி புவனராஜா ஆகியோர் மலர்மாலை அணிவிக்க, சுவாமிகளின் நின்றசிலைக்கு ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா மலர்மாலை அணிவித்தார்.
சுவாமிகளின் ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று பாடல் இசைக்கப்பட்டது.
சுவாமிகள் பிறந்த இல்லத்தில் விஷேட வழிபாடு இடம் பெற்றது. விசேடபூஜையை பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி பஞ்சாரத்தி காட்டி நடாத்தினார்.
விபுலானந்த நர்த்தனாலய மாணவிகளின் ஆடல் பாடல்கள் இடம்பெற்றன.
அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமாரும் கலந்து சிறப்பித்தார்.
இந்துகலாசார திணைக்கள மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.
நிகழ்வில் பணிமன்ற நிருவாகிகள் ஆலய அறங்காவலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.