தும்பன்கேணி காந்திபுரத்தில் ‘நெக்ஸ்ற் ஸ்ரெப்’ அமைப்பினால் அறநெறிக் கல்வி மேம்பாட்டுப்பணி
(பிரபா)
பெரியநீலாவணை நெக்ஸ்ற் ஸ்ரெப் சமூக அமைப்பின் ஆன்மிகப் பிரிவு அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே ஆன்மிக விழுமியங்களை ஏற்படுத்துவதற்காக ஞாயிறுதோறும் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளின் ஒரு கட்டமாநேற்று தும்பன்கேணி – காந்திபுரம் கற்பக விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெற்றது.
கொட்டும் மழையிலும் சுமார் 40 மாணவர்களும் அதிபர் திரு. சத்தியநாதன் உட்பட மூன்று ஆசிரியர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. வனிதா ஏற்பாடு செய்திருந்தார்.
சாந்தி ஸ்லோகங்களும் மஹா காயத்ரி மந்திரமும் உரிய உச்சரிப்புடன் ஓதும் பயிற்சி, நாயன்மார்கள் பற்றிய முக்கிய விடயங்கள், நேற்றைய பங்குனி உத்தர நன்னாளின் முக்கியத்துவம் என்பன பற்றிய கலந்துரையாடல், பண்களுடன் தேவாரங்கள் பாடுதல் பற்றிய பண்ணிசைப் பயிற்சி என்பன நெக்ஸ்ற் ஸ்ரெப் அமைப்பின் தலைமை ஆலோசகரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான திரு. கண.வரதராஜன் அவர்களால் நடாத்தப்பட்டன.
தொடர்ந்து மாணவர்கள் பஞ்சாட்சர ஜெபத்துடன் ஆலய தரிசனம் செய்தல், ஆலயத்தை வலம் வரும்போது போது சிவபுராண பாராயணம் செய்தல், சிறப்பான கூட்டு வழிபாட்டுக்காக இனிய பஜனைப் பாடல்கள் பாடுதல், பூஜையின்போது அமைதி காத்தல் என்பனவும் பயிற்றுவிக்கப் பட்டன.
இச் செயற்பாடுகளை அறநெறிப் பாடசாலை அதிபரும், முத்து விநாயகர் மகா மாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.