கல்முனை மாநகர சபைக்கு களப்பாதுகாப்பு காலணிகள் கையளிப்பு.!
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் நலன்கருதி ஒரு தொகை களப்பாதுகாப்பு காலணிகளை (Safety Foots) கல்முனை பிராத்திய சுகாதார சேவைகள் பணிமனை வழங்கி வைத்துள்ளது.
இவற்றை கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களிடம் கல்முனை பிராத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஷகீலா இஸ்ஸதீன் இன்று வியாழக்கிழமை கையளித்தார்.
இந்நிகழ்வில் பிராத்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பொதுச் சுகாதாரத்துறை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஷாபி, மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், சுகாதாரப் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம். பயாஸ், களஞ்சியப் பொறுப்பாளர் கே. மகேந்திர ராஜா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பையும் சுகாதார நலன்களையும் கருத்தில் கொண்டு அவர்களது நலத் திட்டத்திற்கு உதவுமாறு மாநகர ஆணையாளர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இப்பாதணிகளை வழங்க பிராத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதற்காக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள், கல்முனை பிராத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஷகீலா இஸ்ஸதீன் அவர்களுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.