பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் – முஷாரப் எம்.பி உறுதிபடத் தெரிவிப்பு
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை தனியார் விருந்தினர் விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு – பல்வேறு கேள்விகளுக்கும் பதில் வழங்கினார்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் நிருவாக சமநிலையற்ற தன்மைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
கிழக்கு மாகாணத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் எந்த பதவி நிலையிலும் எவரும் இல்லை என்பதையும், பல்வேறு முக்கிய பதவி நிலைகளுக்கு முஸ்லிம் நிருவாகிகள் உள்ளவாங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள், ‘இதற்கு ஏன் நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ என்று கேட்டிருந்தனர்.இது தவிர அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்த அவர்
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாகவும்இதிணைக்களங்களின் தலைவர்களாகவும் முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் பலரும் நியமிக்கப்படுவதற்கான செயற்பாடுகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளதுடன் அவ்விடயம் விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் நியமிக்கபட்டபோது இனவாதக் கருத்துடன் பலரும் பேச வெளிக்கிட்ட நிலையில், நாமும் அந்தக்கருத்துக்களுடன் செல்லவில்லை.மாறாக கிழக்கைக் கட்டியெழுப்பக்கூடிய துடிப்புள்ள வேகமான செயல்திறன் கொண்ட ஆளுநரே நமக்குத் தேவை என்கின்ற நிலைப்பாட்டுடன் நாம் இருந்தோம்.
அந்த வகையில் திறமையான ஆளுநர் நமக்குக் கிடைத்திருக்கின்றார். இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதைக் காண்கின்றோம்.
அந்த வகையில் கிழக்கு மாாகண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் மிக விரைவாக நியமிக்கப்படுவார்கள் என மிகவும் உறுதியாக அறிகின்றேன். அதற்கான முழுமையான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதையும் முசாரப் எம்.பி. உறுதியாக தெரிவித்தார்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் எம்.ஐ.ரனூஸ், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர் ஜாஹிர், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எஸ்.முபாரக், சதக்கத்துல்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.