கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் ; மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ரத்து செய்ய தீர்மானம்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி அம்பாறை மாவட்ட ஒன்றிணைந்த ஆசிரிய தொழிற்சங்க சம்மேளனம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (14) அம்பாறை மாவட்ட அரசாங்க அலுவலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது மாவட்ட செயலகத்திற்கு முன்னால், ஒன்று கூடிய பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு ஒன்று கூடிய ஆசிரியர்கள், “ரத்து செய்.. ரத்து செய்… இடமாற்றத்தை ரத்து செய்..”, “சீரழிக்காதே சீரழிக்காதே.. கல்முனை மாவட்ட கல்வியை சீரழிக்காதே.. ” “அமுல்படுத்து அமுல்படுத்து 06/2021 இலக்க சுற்றுநிருபத்தை அமுல்படுத்து.. 01/ 2016 ரத்து செய்”. “அழிந்த பொருளாதாரம் வேண்டாம். சீரழிக்காதே சீரழிக்காதே.. ஆசிரியர்களை சீரழிக்காதே.. ” “சீரழிக்காத சீரழிக்காதே மாணவர் கல்வியை சீரழிக்காதே..” , “மறுக்காதே மறுக்காதே ஆசிரியர்களின் உரிமைகளை மறுக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு இணை தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டப்ளியு.டி.வீரசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.முஸாரப், பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.எல்.எம்.அதாவுல்லா உள்ளிட்டோர் தற்போது வெளியிடப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற பட்டியல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டனர் இதனை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசநாயக்க, மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோருக்கு குறித்த இடமாற்ற பட்டியலை எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் ரத்து செய்யுமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அறிவித்தனர். இதேவேளை எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்கும் போது மாவட்டத்திற்குள் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் இங்கு தெரிவிக்கப்பட்டன.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று அவர்களின் ஆவணங்களை கேட்டறிந்ததோடு, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஆசிரியர் இடமாற்றத்தின் போது மேன் முறையீடுகளை செய்த ஆசிரியர்கள் தொடர்பில் கவனம் எடுத்து ஆசிரியர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.