“துரவு” பற்றித் தெரிந்து கொள்வோமே…
— ஊரிலுள்ள ஒரு நிலக்கிழாரைப் பார்த்து, “அவருக்குத்தோட்டம், துரவுஎல்லாம் இருக்கு…”- என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.
— ‘தோட்டம்’- சரி. அது என்ன, ‘துரவு’…?
பெரிய அளவில் பாசனத்துக்குப் பயன்படும் கிணறுதான், ‘துரவு’.
இன்று, “துரவு”- என்ற சொல்லையே நாம் துறந்துவிட்டோம்.
— இதன் நீள அகலம், 1:1, 1:2, 1:3 என்ற விகிதத்தில் அமைய வேண்டும் என விளக்குகிறார் கொடுமுடி ச. சண்முகம்.
— ‘கிணறு தோண்டுதல்’- முதலிய கட்டுமானங்களை விளக்கும், ‘மயமதம்’- எனும் ஒரு பொறியியல் நூல் நம்மிடம் இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்.
— அகலமான கிணறுகள் மட்டுமன்றி, ஆழமான கிணறுகளும் நம்மிடம் இருந்தன.
— ‘நெடுங் கிணற்று வல் ஊற்று உவரி தோணி’ – (97-98) என்கிற, ‘பெரும்பாணாற்றுப்படை’ வரி, தொண்டை மண்டலத்தில் ஆழமாகத் தோண்டப்பட்ட கிணற்றைப் பற்றிக் கூறுகிறது.
இதேபோல் கிணறு வெட்டும் ஆடவர்கள், தீப்பொறி உண்டாகப் பாறைகளை வெட்டி பாலை நிலத்தில் கிணறு தோண்டியிருந்த காட்சியை, ‘வன்புலம் துமியப் போகிக்…’ என அகநானூறு (79:6) விவரிக்கிறது. ஆனால், இவ்விரு பாடலுமே ஒரே செய்தியை தெரிவிக்கின்றன. இப்படித் தோண்டப்பட்ட கிணற்றில், உவர்நீர்தான் கிடைத்தது என்பதே அது. இது பாறையின் தன்மையினால் ஆனது.
இன்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மிக வறண்ட பகுதிகளில், ‘காராளன்_கிணறு’- என்றழைக்கப்படும் பாசனக் கிணறுகள் உள்ளன.
— பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல் கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்.
(மூன்றாம் பத்து – பாட்டு 22: 12-14)
- என்கிற, ‘பதிற்றுபத்துப் பாட்டில்’ வேறொரு கிணற்றைப் பற்றிய காட்சி விளக்கப்படுகிறது. — கரும்பொன்’- எனும் இரும்புக் கோடரியால், வன்மையான பாறை நிலத்தை உடைத்து தோண்டப்பட்டமையால், கற்பாறைகள் ஒழுங்கின்றி உடைந்து, சிதறி சிறிதளவே நீர் ஊறுகிறது. அதில், ‘முகவை’- எனும் மரத்தால் செய்த, நீர் முகக்கும் கருவி ஒரு நீளமான கயிற்றால் பிணைக்கப்பட்டு, நீர் இறைக்கப்படும் காட்சி விளக்கப்படுகிறது. இங்குள்ள பத்தல் எனும் சொல் கவனத்துக்குரியது. இதை, ‘உட்கிணறு’ எனக் கொள்ளலாம். மேலே அகலமாக அகழ்வதைக் ‘கூவல்’- என்றும் அக்கூவலுக்குள்ளே ஆழமாய் அகழ்வதைப் ‘பத்தல்’- என்றனர். இது கொங்குப் பகுதியில் ‘பிள்ளைக் கிணறு’- என்று அழைக்கப்பட்டது. — இதுதவிரத் தமிழகத்தின் பிறபகுதிகளில், குளம் ஏரிக்கு நடுவில் அமைந்த கிணற்றுக்கும், “பிள்ளைக் கிணறு”- என்ற பெயர் இருந்தது. — மணற்பாங்கான இடங்களில், குறிப்பாகச் சோழநாட்டின் ஆற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்ட கிணறுகள், “உறைக்கிணறு”- என்றழைக்கப்பட்டது. — மணலில் தோண்டுவது எளிதன்று. மணல் சரிந்துக்கொண்டே இருக்கும். களிமண்ணால் வட்டைகள் செய்து சுட்டு, அவற்றை உறைகளாகப் பயன்படுத்தியுள்ளனர். மேற்பகுதி மண்ணைத் தோண்டியெடுத்துவிட்டு, மணல் பகுதியில் வட்டையை வைப்பர். வட்டையின் உட்பக்கமுள்ள மணலை தோண்டியெடுப்பர். உறை கீழே இறங்கும். பின் அடுத்த உறையை வைப்பர். உறையின் வாய்ப்பகுதி சற்றே பெரிதாகவும், வால்பகுதி அதனுள் செல்லுமாறும் இருக்கும். பின் உறைக்குள் இருக்கும் மணலை தோண்டுவர். இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் சுரக்குமளவுக்குப் பல உறைகளை இறக்கிக் கொள்வர்.
இவ்வாறு, பல வகையான கிணறுகள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.
— “கிணறு”- என்று பொருள் தரும் சொற்களுக்குத் தமிழில் வறுமையில்லை.
— பாறையைக் குடைந்து செய்யும் குடைக்கிணறு, “குமிழி”- எனப்பட்டது.
— சரளை நிலத்தில் வெட்டப்பட்டுச் சுற்றிலும் கல் மற்றும் செங்கல்களால் அகச்சுவர் கட்டிய கிணறு, “கட்டுக்கிணறு”- எனப்பட்டது.
— “கேணி”- என்றால், ஆழமும், அகலமும் உள்ள பெருங்கிணறு.
— கடலருகே தோண்டிய கிணறு, “ஆழிக்கிணறு.” கடற்கரை ஓரங்களிலும், திருச்செந்தூர் கோவிலருகிலும் இதைக் காணலாம்.
— இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளுடன் அமைந்த பெருங்கிணறு, “நடைகேணி”- ஆகும். இதன் மாதிரிகளைக் கங்கை கொண்ட சோழபுரம், திருவிடைமருதூர் கோவில்களில் காணலாம்.
— ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு, “பொங்கு_கிணறு”- ஆகும். அதாவது, ஆர்ட்டீசியன் கிணறு. (ஆர்ட்டீசியன் ஊற்றுக்கு, “
குமிழி ஊற்று”- என்ற பெயரும் உண்டு)
— “பூட்டைக்_கிணறு”- என்பது கமலை நீர்ப் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறாகும்.
— ஏற்றம் வைத்து நீர் பாய்ச்சும்போது ஏற்றம், குற்றேற்றம், நெட்டேத்தம், கூடையேற்றம், பெட்டி இறைப்பு, கமலை, ஆளேற்றம் என இவற்றில் பலவகைகள் இருந்தன.
— கோடையில், ஆற்றில் அல்லது ஆற்றங்கரையில் அவ்வப்போது தோண்டப்பட்ட கிணறு, “தொடுகிணறு”- எனப்பட்டது.
— காவிரி கடைமடைப் பகுதியில் ஆற்றோரத்தில் தோண்டப்பட்டுக் காய்கறி பாசனத்துக்குப் பயன்பட்ட கிணற்றை, “துலவாக்குழி”- என்பர். துலவம் என்பது ஏற்றத்தில் பயன்படும் நீண்ட மரத்துண்டைக் குறிக்கும். Copied