கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்
அவுஸ்திரேலிய கண் சிகிச்சை நிபுணர்களின் அனுசரணையுடன் கல்முனை றொட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பங்களிப்புடன், கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒத்துழைப்புடன் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் 2024.01.26 மற்றும் 2024.01.27 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
முதல் நாள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடாத்த வந்திருந்த அவுஸ்திரேலிய குளோபல் ஹேண்ட் சரைட்டி (Global Hand Charity – Australia) மருத்துவ அமைப்பினரை மாலை அணிவித்து வரவேற்றதோடு நிகழ்வானது மங்கள விளக்கேற்றளுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி. இரா. முரளீஸ்வரன், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு. T. J. அதிசயராஜ், கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் Dr. நா. நிரோஷன், சமூக சேவை பணிப்பாளர் திரு. சிவஞானசுந்தரம், கல்முனை றொட்டரிக் கழக செயலாளர் திரு. K. குகதாஸ், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் திரு. தோமஸ் தேவஅருள், றொட்டரி கழக உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து அதிதிகள் உரை நிகழ்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய குளோபல் ஹேண்ட் சரைட்டி (Global Hand Charity – Australia) மருத்துவ அமைப்பினரால் மக்களின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு இலவச தரமான கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு நாள் இலவச கண் சிகிச்சை முகாமில் 918 கண் குறைபாடுள்ளவர்களின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.