கல்முனை தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் சூழ்ச்சிகளுக்கும் , அநீதிகளுக்கும் முடிவே இல்லையா என அரசையும், தமிழ் அரசியல்வாதிகளையும் நோக்கி இப்பிரதேச மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சுமார் 34 வருடங்களாக இயங்கி வருகின்ற பிரதேச செயலகமாகும். இந்த செயலகத்தைச் சட்டவிரோதமான முறையில் இல்லாதொழிப்பதற்கான சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்த எமக்கு உதவுங்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது 1989 ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டு பின்னர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட 1993.03.17ஆம் திகதிய மற்றும் 1993.03.31ஆம் திகதிய அமைச்சரவை மசோதாக்கள் மற்றும் அமைச்சரவைக் குழுவின் 1993.07.09 ம் திகதிய அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 1993.7.28 ஆம் திகதிய அமைச்சரவை அனுமதி ஊடாக ஒரு பிரதேச செயலக பிரிவாக உருவாக்கப்பட்டது என்பதையும் அன்றிலிருந்து 34 வருடங்களுக்கு மேலாக மக்களுக்கான சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது என்பதனையும் அனைவரும் அறிவீர்கள் என நினைக்கிறோம். அவ்வாறு இருக்க அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரின் செயலாளருக்கோ அரசாங்க அதிபருக்கோ அதிகாரம் இல்லை என்பது இலங்கையில் இருக்கின்ற சட்டம். (அவ்வாறு ஒரு சட்டம் இருக்கத்தக்கதாக அந்த சட்டத்தை மீறி அல்லது அவமதித்து அம்பாரை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட சில திணைக்களங்களின் அதிகாரிகள் உப செயலகம் என பாவிப்பது எப்படி?)இவர்களுக்கு மாத்திரம் இது எவ்வாறு சாத்தியம் என்பதையும் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தார்கள் என்பதையும் கேட்கிறோம்) மேலும் சில அரசியல்வாதிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கல்முனை அல்லது கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் உப அலுவலகம் ஒன்றாகத் தரம் இறக்கும் நோக்குடன் சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முயற்சி செய்து வருகின்றனர் இது முற்றிலும் சட்டவிரோதமான ஒரு செயல்பாடாகும் என்பதோடு இவற்றின் விளைவாக எமது மக்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன் அரச காணிகள் உட்பட அரச வளங்களின் பங்கீடு அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற அனைத்து விடயங்களிலும் நாம் புறக்கணிக்கப்படுவதோடு (பல இயற்கை நீரேந்து பகுதிகளும் சட்டவிரோதமாக மண்ணிட்டு நிரப்பப்பட்டு மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது) சாதாரணமான சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் கூட தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம் அத்துடன் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களும் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருவதை நாம் அறிகின்றோம். இது தொடர்பாக வினவுவதற்காக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அமைச்சரின் செயலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ள நாம் தொடர்ச்சியாக முயற்சி செய்கின்ற போதும் அதிகாரிகள் பொறுப்பற்ற பதில்களை வழங்குவதோடு பொய் வாக்குறுதிகளையும் கூறி எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். அது மாத்திரமில்லாமல் தொடர்ச்சியாக எங்களுடைய நியாயங்களை நாங்கள் அமைச்சரின் செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு பல நூறு தடவைகள் தெளிவுபடுத்தியும் அதற்கான கடிதங்களை அனுப்பியும் கூட எமக்கான ஒரு பதிலையும் அல்லது ஒரு பதில் கடிதத்தைக்கூட எமக்காக அவர்கள் அனுப்பவில்லை என்பதையும் மன வேதனையோடு வெளிப்படுத்துகிறோம். மேலும் எமது பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்கின்ற போதெல்லாம் அமைச்சின் செயலாளரிடம் இந்த விடயத்தைப் பேசிவிட்டுப் பதில் கூறுகின்றேன் என்று கூறிச் சென்று நழுவி விடுவது கடந்த ஆறு மாதமாக நடந்துவருகிறது. அது மாத்திரமில்லாமல் அமைச்சின் செயலாளருக்கு இதுவரையில் எமது பிரதேசத்தில் இருக்கின்ற சமூக செயற்பாட்டாளர்கள் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பிலும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள போதும் அவை எதற்கும் கூட இதுவரை எது வித பதிலும் கிடைக்கவில்லை என்பதையும் வேதனையுடன் வெளிப்படுத்துகிறோம். இந்தப் பிரச்சினை தொடர்பாகப் பல வருடங்களாப் பலரும் தொடர்ச்சியாக நேரிலும் எழுத்து மூலமாகவும் கோரிக்கைகளையும் நியாயங்களையும் முன்வைத்தும் கூட எமக்கான பதில்கள் இன்னும் கிடைத்ததாக இல்லை என்பதையும் வெளிப்படுத்துவதோடு. இந்த அநீதிகள் தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகளான தாங்கள் அனைவரும் அறிந்திருந்தும் ஏன் மௌனம் காக்கிறீர்கள் எனும் கேள்வி எம்மிடம் எழுகிறது??? உங்களிடம் பெரிதாக ஒன்றையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை நாட்டின் சட்டத்திற்கும் நிர்வாக நடைமுறைகளுக்கும் விரோதமாக வெளிப்படையாக இடம்பெற்று வரும் இந்த அரசியல் சூழ்ச்சியைத் தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்துங்கள் என்றுதான் கேட்கிறோம். நீதியைக் கேட்க உங்களுக்குத் தைரியம் இல்லையா? அல்லது முடியாதா? எனக் கேட்பதோடு ஏதாவது செய்யுங்கள் எனவும் தயவாகக் கேட்கிறோம். அல்லது உங்கள் இயலாமைக்கான காரணத்தையாவது எமக்குத் தெரியப்படுத்துங்கள். தேர்தல் அரசியல் கட்சி அரசியல் என்பவற்றிற்கு அப்பால் தமிழர்களாக இது தொடர்பிலான தங்களின் மேலான ஒத்துழைப்பினை எதிர்பார்த்து உங்களை நாடி நிற்கின்றோம். (இதுவரை இதற்காகவும் எமக்காகவும் தாங்கள் ஒவ்வொருவரும் எடுத்த அத்தனை முயற்சிகளையும் பெரிதாக மதிக்கிறோம் நன்றியும் கூறுகிறோம்)