கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு விருது !
நூருல் ஹுதா உமர்
சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்தான மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தலைவர்கள் சுகாதார அதிகாரிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோவில் மற்றும் பொத்துவில் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், கல்முனை பிராந்திய பிரிவுத் தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகளின் பொறுப்பு வைத்தியர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
சுகாதார அமைச்சின் சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்த பணிப்பாளர் அலுவலகத்தினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட சுகாதார சேவையில் முன்மாதிரியான நடைமுறைகளுக்கான தர மதிப்பீட்டின் அடிப்படையில் பாலமுனை உளநல இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் முதலாமிடத்தினையும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இரண்டாம், மூன்றாமிடங்களையும் பெற்றுக்கொண்டது.
அத்துடன், கல்முனை பிராந்திய தர முகாமைத்துவ பிரிவினால் சுகாதார நிறுவங்களிடையே நடாத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் ஆதார வைத்தியசாலைகளுள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை முதலிடத்தினையும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை இரண்டாமிடத்தினையும், பொத்துவில் ஆதார வைத்தியசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கிடையில் இடம்பெற்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முதலாமிடத்தினையும், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இரண்டாமிடத்தினையும், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
பிரதேச வைத்தியசாலைகளிடையே இடம்பெற்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை முதலாமிடத்தினையும், பாலமுனை பிரதேச வைத்தியசாலை இரண்டாமிடத்தினையும், காரைதீவு பிரதேச வைத்தியசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகளிடையே நடாத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் பெரியநீலாவணை, முகம்மதியாபுரம், உல்லை ஆகிய ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டன.
சகல மதிப்பீடுகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களைப்பெற்ற சுகாதார நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஏனைய நிறுவனங்களின் சிறந்த செயற்பாடுகளையும் பாராட்டி பாராட்டுச் சான்றுதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.