ஓய்வுநிலை காணும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி. இ.ஸ்ரீதர் அம்மணி பற்றியும், அவரின் 13 வருடகால ஆணையாளர் சேவை பற்றிய கண்ணோட்டமும்!

வடமண் யாழ். மாவட்ட மாணிப்பாய் சுதுமலை தெற்கில் ஆறுமுகம் – சுபத்திரை தம்பதியினருக்கு 1963 ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதினாறில் கருவறையிலிருந்து பூவுலகில் இராஜராஜேஸ்வரி கால் பதித்தார்.

அவரது, ஆரம்பக் கல்வியை உடுவில் மகளிர் கல்லூரியில் கற்றுத்தேறிய இவர், சித்த மருத்துவத்துறைக்கு தெரிவானார். யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தில் கல்விகற்ற கையோடு சித்த மருத்துவ ரணசிகிச்சை மாணிபட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

1996 ஆண்டு அரச துறைக்குள் ஒரு சித்த வைத்தியராக உள்நுழைந்த இவர், கடந்த 15 வருடங்கள் கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுள்வேத வைத்தியசாலை மற்றும் கப்பல்துறை தள ஆயுள்வேத சித்த வைத்தியசாலை போன்றவற்றில் வைத்திய பொறுப்பதிகாரியாகவும், பின்னர் கப்பல்துறை தள ஆயுள்வேத சித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பதவியுயர்வு பெற்று, இரு வைத்தியசாலைகளிலும் கடமையாற்றி வந்த நிலையில், 2012.01.02 ஆம் திகதி கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக பதவியுயர்வு பெற்றார்.

அன்று தொடக்கம் இன்றுவரையான ஓய்வுநிலைக் காலம் வரை 13 வருடங்கள் மாகாண ஆணையாளராக இருந்து கொண்டு இனமத வேறுபாடின்றி அவரின் சேவைகளை மிகத்திறன்பட வழங்கி வந்தார்.

குறிப்பாக, யுத்த காலப்பகுதியில் தனிநபர் வீடொன்றில் கோபாலபுரம் ஆயுள்வேத மத்திய மருந்தகம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் அவர் கடமையாற்றும்போது, பல சவால்களை எதிர்கொண்டு தனது உயிரைக்கூட துச்சமாக நினைத்து மிகத் துணிச்சலோடு அக்கிராம மக்களுக்கான வைத்திய சேவைகளை சிறந்த முறையில் வழங்கிய செயற்பாட்டையும், அந்த ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை மாவட்ட சித்த ஆயுள்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தவும் முன்நின்று செயற்பட்டார் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர்ந்து பாராட்டியாக வேண்டும்.

கடந்த 13 வருடங்களாக சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக இருந்த அவர், மாகாணத்திலுள்ள 12 வைத்தியசாலைகளை தரமுயர்த்தவும், புதிய வைத்தியசாலைகளை உருவாக்கவும், அவற்றுக்குத் தேவையான தளபாடங்களை வழங்கி வைக்கவும், 32 வைத்தியசாலைக்கு நிரந்தரக் கட்டிடத்தை அமைத்துக்கொடுக்கவும் ஆவன செய்தார்.

113 ஆக இருந்த வைத்திய ஆளணிகளை 234 ஆக அதிகரிக்கச் செய்தமையும், ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவும், பரம்பரை வைத்தியர்களின் திறமைகளை வெளிக்கொணர வைத்து, அவர்களுக்கான பதிவுகளை பெற்றுக் கொடுத்ததுடன் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வைக்கவும் முன்நின்று செயற்பட்டார்.

வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு துறைசார்ந்த பயிற்சிகளை வழங்கவும், வைத்தியர்கள் தங்களின் பட்டப்படிப்புக்களை வெளிநாடுகளில் மேற்கொள்வதற்கான சகல ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும்
வழங்க உதவி நின்றார்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றி வந்த ஊழியர்களுள் திறமையானவர்களின் கல்வித்தரத்தை அடையாளப்படுத்தி அவர்களை பதவியுயர்த்தும் நோக்கில் மர்த்தனர், மருந்துக் கலவையாளர், பரிசாரகர் போன்ற பதவிகளுக்கான பயிற்சிகளையும், அப்பதவியுயர்வு நியமனங்களை வழங்கி வைப்பதற்கும் முன்நின்று செயற்பட்டார்.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக “சர்வதேச ஆயுள்வேத மாநாடும், கண்காட்சியும்” மிகப் பிரமாண்டமான முறையில் பல்கலைக்கழகங்களின் பங்களிப்போடு நடாத்திய பெருமையும், “கிழக்கின் அவிழ்தம்” என்ற வருடாந்த சஞ்சிகையை வெளியீடு செய்வதற்கும், அச்சஞ்சிகை தொடராக வெளிவருவதற்கும், ஆயுள்வேத வைத்தியசாலைகளிலும், மூலிகைத் தோட்டங்களிலும் காணப்படும் பிரதான மூலிகைகளை அடையாளப்படுத்தி “மூலிகை கையேடு” எனும் தலைப்பில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் நூல் ஒன்றையும் வெளியீடு செய்யவும் செயற்பட்டார்.

குறிப்பாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு வருவாய் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மூலிகை சார் உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கு வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரை ஊக்குவிப்புச் செய்து வல்லாரை கேக், அமுக்கரா பிஸ்கட் மற்றும் சத்துமா பிஸ்கட் போன்ற உற்பத்திகளை சொற்ப காலத்திற்குள் தயாரிக்கச்செய்து அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்கவும், இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் அவற்றை நவீன வடிவில் வடிவமைக்கச்செய்து இலங்கையின் நாலா பக்கத்திலும் அதை கேட்டுப் பெற்றுக்கொள்ளுமளவிற்கு அதில் வெற்றியும் கண்டார்.

இலங்கையின் பிரதம மந்திரி தொடக்கம், கிழக்கு மாகாண ஆளுநர், சுதேச மருத்துவத்துறை அமைச்சர் உள்ளிட்ட ஏனைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் இவர் பெற்றுக்கொண்டார்.

அதுமாத்திரமன்றி வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என்ற பாகுபாடின்றியும், இன மத வேறுபாடின்றியும் எல்லோரையும் சமமாக மதித்து அரவணைத்து நடந்து சென்றதனால், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறையை பல்வேறுபட்ட வளர்ச்சிகளையும், உயர்ச்சிகளையும் காணும் வகையில், இவரது சேவைக்காலம் அமைந்திருந்தது.

குறிப்பாக அவரின் 28 வருட அரச சேவைக்காலப் பகுதியில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடின்றி எல்லோரையும் சமமாக மதித்து அரவணைத்து நடந்து சென்றார். அதுமாத்திரமன்றி அவரெரு மாகாண ஆணையாளர் என்ற அகங்காரம் இல்லாமல் சாதாரண ஊழியர்கள் தொடக்கம் உத்தியோகத்தர்கள், உயரதிகாரிகள் எல்லோருடனும்
பணிவாகவும், கனிவாகவும் நடந்துகொள்ளும் தன்மையினால்,
அவரின் ஓய்வுநிலையை எட்டும்வரை எவ்விதமான பிரச்சனையுமின்றி சுதேச மருத்துவ துறையை செவ்வனே வழி நடாத்திச் செல்வதற்கு எல்லோருடைய மனங்களிலும் இடம்பிடித்தார்.

கடந்த 16ஆம் திகதி 60 ஆவது வயதை பூர்த்தி செய்து 61 ஆவது அகவையில் தடம்பதித்து, 28 வருட அரச தொழிலில் இருந்து, ஓய்வு நிலையை பெற்றுச்செல்லும் இவரை, கிழக்கு மாகாண சுதேசத்துறை இழப்பதற்கு மனமில்லாத நிலைமையில், அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.

அரச தொழிலில் ஓய்வுநிலை என்பது எல்லோருக்கும் பொதுவானதொன்றாகும். அதனால், அவரின் ஓய்வுநிலையை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மத்தியில் எல்லோரும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆள்வினை கொண்ட சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அம்மணி அவர்களின், ஓய்வுநிலைக்காலம் ஆலமரம் போல் மேன்மேலும் வளர்ந்து, உயர்ந்து விருட்சமாகி அவரின் வாழ்நாள் முழுவதும் நலம், வளம், பலம் பெற்று குடும்ப சகிதம் நீடூழி காலம் வாழவேண்டுமென கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் அதற்கு கீழ் இயங்குகின்ற கிழக்கு மாகாணத்திலுள்ள
அனைத்து ஆயுள்வேத வைத்தியசாலைகளின் வைத்திய பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அத்துணை பேரும் இறைவனை இறைஞ்சிகின்றனர்

வாழ்க பல்லாண்டு!
வளம் யாவும் பெற்று இனி!

தொகுப்பு:
பைஷல் இஸ்மாயில்
மர்த்னர்
சுதேச மருத்துவ திணைக்களம்
கிழக்கு மாகாணம்