தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டனின் பார்நெட் (Barnet) நகரில் இல் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி ஐ.நா. மனித உரிமைகள் தினத்தை அறிமுகப்படுத்தி 75 ஆவது ஆண்டான நடப்பாண்டில் TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டன் பார்நெட் நகரில் அமைந்துள்ள Multi Cultural Community Centre இல் பிற்பகல் 2.00 மணிமுதல் 6.00 மணி வரை நடைபெற்றது .
அனைவருக்குமான கண்ணியம் சுதந்திரம் மற்றும் நீதி (Dignity, Freedom and Justice for All) என்ற கருப்பொருளை மையமாக் கொண்ட TIC யின் மேற்படி மனித உரிமைகள் தின நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
விபுலானந்த அடிகளார் நாவலர் கீர்த்திமாலை என்னும் நூலில் தமிழ்மொழி வாழ்த்து என்று குறிப்பிடப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களுக்கே உரித்தான தமிழ் மொழி வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பார்னட் நகர மேயர் கவுன்சிலர் நாகுஸ் நரேந்திரா அவர்களும், சிறப்பு விருந்தினராக பிரித்தானியாவின் பார்னட் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் துணைத்தலைவருமான மதிப்பிற்குரிய திரேசா வில்லியம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதே வேளை இந் நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்களாக கிங்ஸரன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியரும் மனித உரிமை மற்றும் சமூக நீதியாளருமான கலாநிதி அன்டி கிகின்பொட்டம் (Dr Andy Higginbottom) அவர்களும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் இயக்குனர் அன்டி பெய்லி (Mr Andy Bailey) அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அத்துடன் மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கல்வியலாளர்கள் மற்றும் TIC யின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் பிரதான சிறப்பம்சமாக TIC யினால் வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் விருதுகள் இம்முறை இருவருக்கு வழங்கப்பட்டது.
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் (ITJP) இயக்குனரும் முன்னாள் ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் ஐ.நா.வின் ஆலோசகருமான பிரான்சிஸ் ஹரிசன் (Frances Harrison) அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயலாற்றிவரும் ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பாசனா அபேவர்த்த (Bashana Abeyawardane) அவர்களுக்கும் மேற்படி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
TIC யின் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் இயங்குனருமான மறைந்த வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது எழுத்தாளரும் மனித மரபியல் கல்வி ஆய்வாளருமான வைத்தியர் சிவா தியாகராஜா (Dr Siva Thiagaraja) அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் பிரித்தானியாவில் தமிழர் பண்பாட்டு மையம் (Tamil Heritage Centre) ஒன்றை உருவாக்குற்கான தேவை தொடர்பிலான ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதுடன், அதற்கான திட்ட முன்மொழிவும் கோரிக்கையும் நகர மேயரிடம், TIC மற்றும் CCDயின் பண்பாட்டு பிரிவின் சார்பில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் சிறப்பு கலைநிகழ்வாக, அலன் பிரதீபன் அவர்களின் மனிஉரிமைகள் தொடர்பிலான “றப்” இசையும், இலண்டன் மெய்வெளி அரங்க கலைஞர்களின் “நான் புதைக்கப்பட்டவன்” என்ற சிறப்பு நாடகமும் இடம்பெற்றன. அத்துடன் தொண்டர்களுக்கான மதிப்பளிப்பு மற்றும் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு என்பவையும் சிறப்புற இடம்பெற்றன.
இந்த நிகழ்வு TIC யின் பணிப்பாளர்களில் ஒருவரான திரு கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன், செயற்பாட்டாளர்களான செல்வன் டிலக்ஷன் மனோரஜன் மற்றும் செல்வி சுபமகிசா வரதராசா ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டிலக்ஷன் மனோரஜன்



















