கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில்….
தருமலிங்கம் சித்தார்த்தன்
குமார் பொன்னம்பலம்
சிவநேசதுரை சந்திரகாந்தன்
றவூப் ஹக்கீம்
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமும் கருத்துக்கள் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டன.
தர்மலிங்கம் சித்தார்த்தன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பல தசாப்தங்கள் கடந்து மக்களுக்கான அரச சேவையை சுதந்திரமாக வழங்குவதில் பல இடர்களை எதிர்கொண்டே வருகின்றது. தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் அமைச்சராக வஜிர அபயவர்த்தனவும் இருந்த போதும் கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கான பிரச்சனையை தீர்ப்பதற்கு முதலில் கணக்காளரை நியமிப்பது என உறுதியளிக்கப்பட்டு கணக்காளரின் பெயரும் குறிப்பிடப்பட்டது பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் சென்று கணக்காளரை நியமிக்க வேண்டாம் என கூறுகின்ற போது அது நிறுத்தப்படுவதும் பின்னர் எங்களிடம் வாக்குறுதி அளிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவர்கள் யாரின் வாக்குகளை பெறுவதற்காக இவ்வாறு இழுத்தடிப்பு செய்கின்றார்கள் ஆகவே இனியும் தாமதிக்காமல் முதலில் கணக்காளரை நியமித்து நிதி, காணி அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றார்.
குமார் பொன்னம்பலம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அதற்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக கொள்கையளவில் முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுடன் ஏற்றுக்கொண்டிருந்தது. எல்லை நிர்ணயம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் ஒரு இணக்கத்துக்கு வரலாம் அதனை நாமும் ஏற்கிறோம் அதற்காக கணக்காளர் நியமிப்பதில் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை முதலில் கணக்காளரை நியமிக்கலாம் எல்லை நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முன்னேடுக்கலாம் என்றார்.
சிவனேசதுரை சந்திரகாந்தன்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது இது கல்முனைப் பிரதேச தமிழ் மக்களின் அரசியல் சேவை பெறுவது தொடர்பான உரிமைப் பிரச்சினை முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகளும் உறவுகளும் இருக்கின்றது அவர்களுடைய கட்சி சார்ந்த வழக்குகளில் கூட நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் இணைந்து செயல்படுகின்றார் இந்த நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முதலில் கணக்காளரை நியமிப்பது தொடர்பில் இவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வராதது வேடிக்கையாக உள்ளது என்றார்.
ரவூப் ஹாக்கீம்
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கல்முனை தெற்கு முஸ்லிம் பிரதேச செயலகம் இவை தொடர்பாக இருக்கின்ற பிணக்குகளுக்கு எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ள பிரதேச செயலகத்துக்கு 29 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கும் 29 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இவைகளை கருத்தில் கொண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றார்.