அபு அலா –
கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக சுதேச மருத்துவத்துறையில் ஓட்டிசப் பிரிவொன்று, நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் (19) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.
கல்முனைப் பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண (PSDG) நிதியின் கீழ் சுமார் 18.5 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட ஓட்டிசப் பிரிவு மற்றும் பக்கவாப் பிரிவு போன்ற இரு பிரிவுகளையும் திறந்து வைத்த ஆளுநர், அங்குள்ள சிறுவர்களுக்கு சுதேச மருத்துவ திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட ஆயுள்வேத சத்துமா பிஸ்கட்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள திட்டமிடல் பிரிவு வைத்தியர் எம்.வர்மேந்திரன், அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.அப்துல் ஹை, கல்முனை பிராந்திய ஆயுள்வேத வைத்தியசாலைகளின் வைத்தியப் பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.