பாறுக் ஷிஹான்









ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து
இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும்
இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது.
அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில்
நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு பல சந்தர்ப்பங்களில் கூடி விசேட குழுக் கலந்துரையாடல்கள் மூலம் தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்கும் செயல்முறையில் அனைத்து பங்குதாரர்கள் மற்றும்
ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதற்கமைவாக வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று இன்று (26) திகதி காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் டீ.எல்.யூ.பீரீஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் மொழி மற்றும் தொடர்பாடல் கற்கைகள் பிரிவின் தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சிவபிரியா, வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டபிள்யூ.பீ.செவ்வந்தி, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமாகிய மஹிந்த பத்திரன, மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், வெகுசன ஊடக அமைச்சின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஊடகம்சார் விசேட நிபுணர் சதுரங்க அப்புவாராச்சி, உயரதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சினால்
இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும்
இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருகின்றமைக்கான காரணம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில்
நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு இதன்போது விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.
அத்தோடு இவ்வாறான ஒரு கொள்கை சட்டமொன்றை உருவாக்கி அதனை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தும் போது ஊடகவியலாளர்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படாத வண்ணம் அது அமைய வேண்டும் என்றும் அவ்வாறான சட்டமொன்றை உருவாக்கும்போது கட்டாயமாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், வழிநடத்தல் குழு ஸ்தாபிக்கும்போது அக்குழுவில் கட்டாயமாக மாவட்ட ரீதியில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதன்போது ஊடகவியலாளர்களிடமிருந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில் கல்வியியலாளர்கள், வெகுசன ஊடக நிறுவன பிரதிநிதிகள், உரிமைசார் அமைப்புக்கள் ,ஊடகவியலாளர்கள்,பிராந்திய ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.