கல்முனை மாநகர பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை
(ஏயெஸ் மெளலானா)
கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் புதன்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, திண்மக்கழிவகற்றல் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் பாடசாலைகளின் அதிபர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளூம் போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை அதிபர்களிடம் கேட்டறிந்து கொண்ட மாநகர ஆணையாளர், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தினார்.
திண்மக்கழிவகற்றல் சேவையின்போது மாநகர சபையினால் வகுக்கப்படும் பொறிமுறைகளுக்கேற்ப திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் குப்பைகள் ஒப்படைக்கப்படுமாயின் பாடசாலைகளில் இருந்து
அவற்றை இலகுவாக அகற்றிக் கொள்ள முடியும் எனவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக உக்கக்கூடிய கழிவுகள் மற்றும் உக்க முடியாத கழிவுகள் என குப்பைகளை வகைப்படுத்தி வெவ்வேறு பைகளில் சேகரித்து வைக்க வேண்டும் எனவும் அவற்றை பாடசாலைகளின் நுழைவாயில்களில் வைத்து தாமதமின்றி உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக குப்பைகளை வகைப்படுத்தி சேகரிப்பதற்கான இரு வகையான பைகள் அனைத்து பாடசாலைகளுக்கும் மாநகர சபையினால் இலவசமாக
வழங்கி வைக்கப்பட்டன.












