செனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச சேவையின் அதிகாரிகளை கொண்டே இந்த குழுவை அமைக்க ஜனாதிபதி ஆலோசித்துள்ளார்.பாதுகாப்பு பிரதானிகளுடனான கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குழுவை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரட்ணாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செனல் 4 வெளிப்படுத்தியுள்ள ஆவணப்படம் தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இந்தச் செயல்பாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பொறுப்பு ஆளுங்கட்சியின் கொரடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஜனாதிபதி செனல் 4 வின் ஆவணப்படம் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்த தீர்மானித்துள்ளார்.எவராயினும் இந்த குழுக்களில் தமது கருத்துகளை முன்வைக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.