-யசி-
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (ஆகஸ்ட் 30) நீதி கோரி வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வடக்கு மாகாணத்துக்கான பிரதான போராட்டம் இம்முறை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கான பிரதான போராட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்பினர், சிவில் அமைப்பினர், சட்டத்தரணிகள், மதகுருமார்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களைச் சுமந்து பல்வேறு கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.





