இலங்கை கடனால் மட்டுமல்ல கலவரத்தாலும் மூழ்கத்தான் போகிறது.
-ஜனதன் அல்பிரட்-
“கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே – உன்னுடைய நாக்கு கூர்மையான ஆயுதத்தை போன்றது. அது ரத்தம் இல்லாமல், காயம் இல்லாமல் ஒருவரை கொன்று விடும்.”
“கோபத்தை கட்டுப்படுத்து – நீ உனது கோபத்திற்கு உன்னால் தண்டனை கொடுக்க முடியாமல் போனால், அந்த கோபம் உனக்கு தண்டனை கொடுத்து விடும்.”
இவை, அன்பு, அகிம்சை, அமைதி, சமாதானம் ஆகியவற்றை உலகிற்கு போதித்த புத்தரின் ஊக்கமளிக்கும் பிரதானமான இரு போதனைகள். உண்மையில் இலங்கையில் சில பிக்குகளின் செயற்பாடுகளை பார்க்கும் போது குறித்த புத்தரின் சிந்தனைகளுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் தொடர்புகளே இல்லை எனலாம்.
அதற்கு முழுக்க முழுக்க பிக்குகளுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கும் இலங்கையின் அரசியலமைப்பும், இனவாதத்தை முன்னிறுத்தி அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் அரசியல்வாதிகளுமே காரணம் என்றே நான் சாடுவேன்.
குறிப்பாக இலங்கை பௌத்த நாடு, சிங்கள மொழிக்கு அதிக முக்கியத்துவம், பிக்குகளுக்கு ஆட்சியாளர்கள் மாத்திரம் அல்ல சட்டங்களும் அடிபணிய வேண்டும் எனும் தோற்றப்பாடுகள் துறவறம் பூண்ட சாதுக்களுக்கு கொம்பு பொருத்தி இறுதியில் ஆசை துறந்தவர்களை தற்போது அரசியல் வாதிகளாகவும் கொள்கை வகுப்பாளர்களாகவும் மாற்றியுள்ளது.
உதாரணமாக பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தமை.
பிரதமர் பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை.
இன பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக கூறி 1994ம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா அம்மையாரை, பௌத்த தேசியவாதிகள் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்ற கட்டமைப்பை யாராலும் மீறிச் செல்ல முடியாது என கூறி தடை போட்டமை.
என பிக்குகளின் ஆசைகளையும், இன்னொரு இனம் மீது கொண்ட கோபங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம், இப்படி மக்களையும், ஆட்சியாளர்களையும் நல்வழிப்பப்டுத்த வேண்டியவர்கள் நேரடி அரசியலிலும் நுளைய சிஹல உறுமய என்ற அமைப்பையும். 2004ஆம் ஆண்டில் ஜாதிக ஹெல உறுமய கட்சியை உருவாக்கினார்கள், அவ் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 552,724 வாக்குகளை பெற்று , 9 பௌத்த பிக்குகள் நாடாளுமன்றத்துக்கு சென்றனர்.
அதன் பேறாக சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் தேசிய, மத எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பௌத்த பிக்குகள் செயற்பட்டு நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை குழப்பியடித்தார்கள்.
அதுமட்டுமல்ல, மாவிலாறு அணையை புலிகள் அடைத்தபோது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போரைத் தொடங்காவிடின், மாவிலாறைக் கைப்பற்ற படையெடுத்துச் செல்லோம் என்று கந்தளாயில் நின்று கொண்டு மிரட்டி அதனை சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் போராக மாற்றினர்.
இருந்தும் அரசியல் பருவமாற்றத்தால் சிலகாலம் அமைதியடைந்து தற்போது பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்டோர், பௌத்த மத அடிப்படைவாத அரசியல் இயக்கமாக மீண்டும் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
பௌத்த பிக்குகள் அரசியல் ஈடுபடுவது பௌத்த தர்மத்துக்கும் அதன் நலனுக்கும் எதிரானது என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவதை கேட்கின்ற மனோநிலையில், இந்த பௌத்த பிக்குகள் தற்போது இல்லை. அவர்கள் இனவாதம், மதவாதத்தை கிளப்பி, குழம்பிய குட்டையில் மீண்டும் மீன்பிடிக்க எத்தனிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு 13 கிழித்தெரியப்பட்டு சூடேற்றப்பட்டு தற்போது தமிழர் பகுதிகளில் பௌத்த மேலாதிக்கத்தை நிலை நாட்ட அடாவடித்தனமாக காணிகளை அபகரிப்பதும், இன்னொரு இனத்தின் வழிபாட்டிடங்களில் விகாரைகளை அமைப்பதும், தமிழர் பிரதிநிதிகளை அச்சுறுத்துவதும், அதிகாரிகளை அடக்க முனைந்து சாதிப்பதும் என சாதுக்களில் சிலர் சண்டியர்களாகவே மாறி நிற்கிறார்கள்.
இதன் ஊடாக எதிர்காலத்தில் மீண்டும் ஓர் இனக் கலவரத்தினை உருவாக்கி பௌத்த மத அடிப்படைவாத கட்சி ஒன்று தேர்தலில் அதிகளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கவே அவர்கள் முனைக்கிறார்கள்.
அந் நிலை சிறுபான்மையோருக்கு மிகவும் ஆபத்தானதாக மாறலாம்.
எனவே இந்த பிக்குகளுக்கு ஏதோ ஒரு வழியில் நீதித்துறையோ, அரசாங்கமோ கடிவாளம் இடாது போனால் இலங்கை கடனால் மட்டுமல்ல கலவரத்தாலும் மூழ்கித்தான் போகும்.