”பதின்மூன்று” – ”இராவணன் சிங்களவர்“
நெருக்கடியை மறைத்துத் திசை திருப்பும் உத்தி!


அ.நிக்ஸன்

பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்திற்காக ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றத்தில், தமிழ் – சிங்கள முகங்களாகத் தன்னைக் காண்பித்து அதுவும் குழப்பகரமாக உரையாற்றிச் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை மேலும் தூண்டியமைக்குப் பிரதான காரணம் எதுவாக இருக்கும்?

இராவணன் சிங்களவர் என்று சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் மார்தட்டியமை எதற்காக?

இந்த இருவரின் உரைக்குப் பின்னர் இரு விடயங்களை பிரதான சிங்கள ஆங்கில ஊடகங்களிலும் மற்றும் சமூகவலைத் தளங்களிலும் அவதானிக்க முடியும்.

          ஓன்று, பதின்மூன்றை நடைமுறைப்படுத்தினால் இலங்கை பிளவுபடும் என்ற பிரச்சாரம். மகாநாயகத் தேரர்கள் கண்டனம் வெளியிட்டுப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

          இரண்டாவது, இராவணன் சிங்களம் என்று கூறப்பட்ட பின்னர் சிங்களவர்களின் வருகைக்குப் பின்னரே தமிழர்கள் இலங்கைக்கு வந்தனர் என்ற கற்பனை கலந்த மகிழ்ச்சிகரமான பிரச்சாரங்கள்.

ஆனால், இப்போது கவனிக்க வேண்டியவை—

மீள முடியாத சர்வதேசக் கடன்கள் – பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களுக்காகக் கோட்டாபயவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து துரத்திய சிங்கள மக்களும் பௌத்த குருமாரும் சிங்கள ஊடகங்களும் தற்போது பன்மூன்றுக்கு எதிராகச் செய்யும் தீவிர பிரசாரங்கள்.

இராவணன் சிங்களவர் என்று கூறி ஆரியர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயான உறவு பற்றிய மகிழ்ச்சியான உரையாடல்கள், சிங்கள சமூகவலைத் தளங்களில் அதிகரிப்பு.

இப்போது கேள்வி என்ன?

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பன்னிரெண்டு சதவீத வட்டி ஒன்பது சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. 2026 ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்த நடைமுறை இருக்கும்.

         ஆனால் இதுவரையும் எந்த ஒரு சிங்களத் தொழிச்சங்கமாவது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததா? கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதா? 

         கடந்த ஒரு மாதமாகப் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியைச் சந்தித்து வருவது பற்றிச் சிங்கள மக்களில் எவருக்காவது தெரியுமா? 

      மீண்டும்  ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் 

நடப்பது பற்றிச் சிங்களவர்கள் யாராவது அறிய முற்பட்டார்களா?

       வருமான வரித் திணைக்களம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விண்ணப்பப்படிவங்களை அனுப்புகிறது. பொருளாதார நெருக்கடிச் சூழலில் கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. 

மகிந்த, கோட்டபாய ஆகியோர் ஜனாதிபதியாக இருந்தபோது அரச வங்கிகளில் இருந்து அரசியல் செல்வாக்குகளினால் சில தனியார் நிறுவனங்கள், சில தனி நபர்கள் பெற்ற பல மில்லியன் ரூபாய் பெறுமதியான கடன்கள், மீளப் பெறப்படாமல் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பில் கதைகள் உலாவுகின்றன.

இவை பற்றியெல்லாம் சிங்கள ஊடகங்களில் ஏதாவது செய்தி வெளியிடப்பட்டதா? பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மில்லியன் கடன்களை ரத்துச் செய்துவிட்டுச் சாதாரண மக்களை ஒத்துழைக்குமாறு வருமான வரித்திணைக்களம் எவ்வாறு கோர முடியும்?

         ஆகவே இவற்றை மூடிமறைக்கவே பதின்மூன்று பற்றிய உரையாடலும், இராவணன் சிங்களவர் என்ற கதைகளும் பரப்புரை செய்யப்படுகின்றன என்ற சந்தேகங்கள் உண்டு. 

ஆனால் சிங்கள மக்களுக்கும் சிங்கள ஊடகங்களுக்கும் மற்றும் சிங்கள சமூகவலைத் தளங்களுக்கும் யார் புத்தி சொல்வது?

எதையும் திசைதிருப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கித் தமது காரியங்களைக் கன கச்சிதமாகச் செய்து முடிப்பதில் ரணில் மாத்திரமல்ல, சிங்கள ஆட்சியாளர்கள் எல்லோருக்கும் அது கைவந்த கலை.

பிரதான சிங்கள எதிர்க்கட்சி, ரணிலின் திசை திருப்பல் பற்றிப் புரிந்து கொண்டாலும், அமைதியாக இருப்பதற்குப் பல பின்னணிக் காரண – காரியங்கள் இல்லாமலில்லை.

இனவாத மகிழ்ச்சியில் ழுழ்கியுள்ள சிங்கள மக்கள் பலரும் இந்த உண்மையைப் புரிய மறுக்கின்றனர் என்பது வேறு. ஆனால் தமிழர்கள் அதுவும் எண்பது வருடம் அரசியல் விடுதலைப் போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு ஏன் இந்த உண்மை புரியவில்லை?

பதின் மூன்று பற்றியும், இராவணன் தமிழ் மன்னன் என்றும் பதிலுரைத்துச் சில தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் சில தமிழ்ச் செய்தி இணையத் தளங்களும் மற்றும் தமிழ் அறிஞர்கள் சிலரும் ஏன் குத்தி முறிகின்றனர்?

இராவணன் குறித்த அடிப்படையற்ற கற்பனா வாதங்களில் இருந்து தமிழ் – சிங்கள புத்திஜீவிகள் என்று தம்மைத்தாமே அழைப்போர் மீண்டெழுந்து வருவார்களா?

இங்கு பிரதான தமிழ் நாளிதழ்கள், ஞாயிறு வார இதழ்களின் பொறுப்பு என்ன என்ற கேள்விகளும் விஞ்சியுள்ளன.

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்,