மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா?
பாறுக் ஷிஹான்
தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவு சாய்ந்தமருது பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ளடங்குகின்ற பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் இவ்வாறு இனந்தெரியாத நபர்கள் தலைக்கவசம் இன்றி பொதுப் போக்குவரத்தை குழப்பும் வகையில் அதி சக்தி இயந்திரம் கொண்ட மோட்டார் சைக்கிளில் வருகை தந்து அச்சுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் தனியாக வருவதுடன் அதிக சத்தம் கொண்ட ஒலி எழுப்பி வீதிகளின் நடுவே அதிவேகமாக பயணம் செய்து ஏனையோரை அச்சுறுத்தி வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி பாராளுன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உட்பட சிலர் முறைப்பாடுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாறானவர்கள் வீதி போக்குவரத்து சட்டத்தை மதிக்காமல் தொடர்ச்சியாக பாடசாலை நாட்கள் அலுவலக நாட்களிலும் மிக வேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி சாகசங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சட்டவிரோதமாக பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து உயிர் சேதத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய பொலிஸார் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.