மோடி -ரணில் சந்திப்பும், தமிழர் விவகாரமும் -‘தி இந்து வெளியிட்ட கருத்து!
இந்தியாவின் முக்கியமான தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘தி இந்து’ இலங்கை ஜனாதிபதியின் பயணம் குறித்து நேற்று ஆசிரியர் தலையங்கத்தில் வெளியிட்ட செய்தியானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
“இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கூட்டாக வெளியிடப்பட்ட ‘தொலைநோக்கு ‘ அறிக்கையில் எதிர்காலத்துக்கான விரிவான திட்டங்கள் குறித்து விளக்கம் தரப்பட்டிருக்கின்றது.
ஆனாலும், விக்கிரமசிங்கவின் பயணத்தின் போது வெளியிடப்பட்ட எந்தவோர் எழுத்து மூல ஆவணத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை மதிப்பதாக இலங்கையால் முன்னர் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் பற்றியோ அல்லது இந்திய மீனவர்கள் கைது செய்யபடுவது தொடர்பிலான பிரச்சினை குறித்தோ எதுவும் கூறப்படவில்லை’ என்றும் தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.
‘இன்னமும் பூரணமாகவில்லை’ (Still Incomplete ) என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த ஆசிரியர் தலையங்கம் இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் தமிழர் பிரச்சினையால் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது.’
பிரதமர் மோடி மாத்திரமே தனது உரையில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் மாகாண சபை தேர்தல்களின் அவசியம் குறித்தும் இலங்கையின் தமிழ் சமூகத்தின் கௌரவமும் கண்ணியமும் கொண்ட வாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் அழுத்தமான வேண்டுகோளை விடுக்கவேண்டி ஏற்பட்டது.
‘ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கும் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக பதற்றத்துக்கு காரணமாக இருந்துவரும் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு அவரின் அரசாங்கத்துக்கு ‘தேர்தல் ஆணை’ கிடையாது என்று தெளிவாகக் கூறியிருக்கிறது.
‘விக்கிரமசிங்க டில்லியில் வெளியிட்ட கருத்துகளிலோ அல்லது கூட்டு அறிக்கையிலோ இந்த முக்கிய விடயங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாதமையே இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் மூலம் மிகப்பெரிய செய்தியாக இருக்கக்கூடும்.
‘புதுடில்லி மீது வேறு விவகாரங்களுக்காக இலங்கை தங்கியிருந்தாலும் கூட, இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளுக்குள் தமிழர் பிரச்சினை தொடர்பான அதன் வரலாற்று ரீதியான அக்கறைகளை கொண்டு வருவதை இனி மேலும் இலங்கை விரும்பப் போவதில்லை என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது.
‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலிமையான சகோதரத்துவ உறவுகள் நீடித்து வந்திருந்தாலும் கூட கடந்த காலத்தில் வரலாறு உறவுகளில் இடறல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த பிரச்னைகளுக்கு இணக்கமான ஒரு தீர்வை உள்ளடக்காத எதிர்காலத்துக்கான எந்தவொரு நோக்கும் பூரணத்துவம் அற்றதாகவே கருதப்படும்’, என்றும் தி இந்து கூறியுள்ளது.