இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம், இலங்கை அரசியலில் இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்கு சென்றிருக்கிறார்.
ஹைத்ராபாத் இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மோடி வரவேற்றதோடு, இரு நாட்டு தலைவர்களும் இன்று காலை முக்கியக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்பின்னர் இருநாட்டு தலைவர்களும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த சந்திப்பின்போது, தமிழில் வணக்கம் எனவும் சிங்களத்தில் ஆயுபோவன் எனவும் கூறி தனது உரையை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்தார்.
இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்ப்படுத்தி, தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடன் வாழ்வதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்திய – இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் பல உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடையொட்டி அவர்களின் மேம்பாட்டு உதவும் வகையிலான திட்டத்தையும் இதன்போது மோடி அறிவித்துள்ளார்.தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்தை இலங்கையில் உறுதி செய்ய வேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்ப்படுத்துதல், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி மொழிகளை நிறைவேற்றும் என்றும் இந்தியா எதிர்பார்ப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதற்தடவை. இது எனக்கும், எனது அரசாங்கத்துக்கும் மிகவும் முக்கியமான சந்திப்பு என இதன்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“அதிகாரப்பகிர்வின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்தல் உள்ளிட்ட வடக்குக், கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான யோசனை ஒன்றை இந்த வாரம் நான் முன்வைத்திருக்கிறேன்.
தேசிய ஒருமைப்பாடை ஏற்படுத்திக்கொண்டு இந்த விடயத்தில் இணைந்து செயற்பட வேண்டுமென அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுத்திருக்கிறேன்.
இது தொடர்பில் பொறுத்தமான சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும். இது குறித்து இந்திய பிரதமருக்கு விரிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறேன்.” எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.