அநுராதா யம்பத் ஆளுநராக இருக்கும் போது நஷீருக்கு ஏன் கொம்பு முளைக்கவில்லை?
தங்கள் வங்குரோத்து அரசியலுக்காக இனவாதத்தை கக்கி மக்களை மடையராக்க நினைக்கும் இனவாதிகளுக்கு மக்கள் இனியும் இடமளிக்க கூடாது என்பது பலரின் கருத்தாக உள்ளதை அவதானிக்க முடிகிறது.
“கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்தில் தொண்டைமானின் அப்பாவின் சொத்துக் கிடையாது” என தனது அரும்பு மீசையை முறுக்குகிறார் அமைச்சர் ஹாபீஸ் நஷீர்.
. ஆளுநராக அனுராதா யஹம்பத் இருந்த போது வாயில் பிளாஸ்டர் போட்டு மூடிக்கொண்டிருந்த இவருக்கு இப்போது வீரம் பிறந்துள்ளது. அனுராதா இருக்கும்போது இவ்வாறு ஒரு எச்சரிக்கையை விட்டிருந்தால் இவரை ஒரு ரோஷமுள்ள அரசியல் வாதியாக கருதியிருக்கலாம்.
தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான கால் நடைகளின் மேய்ச்சல் தரைகளில் கிழக்கு மாகாணத்தைச் சாராத சிங்களவர்கள் அனுராதாவின் ஏற்பாட்டில் புரிந்த அடாவடிகளின் போது எதாவது அறவழிப் போராட்டங்களில் பங்குபற்றியிருந்தால் அல்லது நீதிமன்றங்களில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டு சட்டரீதியான போராட்டங்களை நடத்தியிருந்தாரெனில் இவருக்கு இப்போது வந்துள்ள ரோசம் நியாயமானதென்று சொல்லலாம்.
எண்ணிக்கையில் கூடுதலாக உறுப்பினர்கள் இருந்த போதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முஸ்லீம் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து இவரை முதலமைச்சராக்கவும் சம்மதித்தது. வடக்கு கிழக்கு மாகாண கல்வி அதிகாரியாக இருந்த திரு. தண்டாயுதபாணி கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். சில நாட்களில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாராவது இருந்தால் தன்னுடன் தொடர்பு கொண்டால் (முஸ்லீம் ஆசிரியர்களே இலக்கு) தான் நிவர்த்தி செய்வதாக நசீர் அறிவித்தார். இது கல்வி அமைச்சர் தண்டாயுதபாணியின் ஆளுமையைக் கேள்விக்குட்படுத்தும் விடயம். அச்சமயம் கிழக்கு மாகாண சபை ஹாபீஸ் நசீர் அகமத்தின் வாப்பாவின் சொத்தல்ல எனத் தண்டாயுதபாணி கொதித்தெழும்பினாரா? அப்படி சொல்லிருந்தால் நஸீரின் பிரதிபலிப்பு என்னவாக இருந்திருக்கும்? சிறுபான்மை இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன் தான் நஷீரை முதலமைச்சராக்க கூட்டமைப்பு சம்மதித்தது.நிர்வாக ரீதியான எந்த குழப்பங்கள் மாற்றங்கள் ஏற்படுத்த முயன்றபோதும் இனஉறவு பாதிக்கப்படும் என்ற வகையில்தான் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் பின் அரைப்பகுதியில் தமிழரை முதலமைச்சராக்க வேண்டும் என்று கூட்டமைப்பு நிபந்தனை விதிக்கவில்லை. கூட்டமைப்பு செய்த விட்டுக்கொடுப்பு அவர்களது வாக்கு வங்கியில் ஏற்படுத்திய பாதிப்பை தொடர்ந்து வந்த தேர்தல்களில் காணமுடிந்தது.
நஸீர் படிக்கவேண்டிய குறள் இது
“யாகாவாராகினும் நாகாக்க – காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுகப்பட்டு “
அமைச்சர் நஸீரின் கருத்துக்கெதிராக தற்போது முஸ்லீம் அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன என்பது ஆறுதலான செய்தி காலத்துக்குக் காலம் தாமே துட்டகைமுனுவின்வாரிசு என நிறுவ சிங்கள அரசியல் வாதிகள் முற்பட்டதுண்டு. அந்த நீண்ட பட்டியலில் தற்போதுள்ளவர்களில் விமல் வீரவன்ச போன்றோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேற முனைகிறார் சரத் வீரசேகரா. இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமானது என்பது இவரது நிலைப்பாடு.பாராளுமன்ற உரைகளில் நீதிமன்றை அவமதித்தவர். தற்போது பெரும்பாலும் வடக்குடன் தொடர்பில்லாத சிங்களவர்களை பேரூந்துகளில் அனுப்ப ஏற்பாடு செய்த இவர் குருந்தூர் மலைபொங்கல்விழாவில் அட்டகாசம் புரிய வைத்துள்ளார்.
ரணிலுக்கு பதிலாக மகிந்தாவை பிரதமராக மைத்திரி நியமித்த போது இரவு பகலாக கண் விழித்து சட்டங்களை திரும்பத் திரும்பத் வாசித்து நீதிமன்றில் வாதாடியவர்கள் இந்த விடயத்தில் ஏன் கவனம் எடுக்க வில்லை என்று தெரிய வில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் குருந்தூர் மலையில் நீதி மன்ற உத்தரவை மீறும் துணிவு பிக்குகளுக்கு வந்திருக்காது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தீவிரப்படுத்தியிருந்தால் பொலிசார் சப்பாத்துக்காலால் உதைக்கும் நிலை தோன்றியிருக்காது.