பாலர் பாடசாலை திறந்து வைப்பு!
அபு அலா
நிந்தவூரில் 9.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அல் – ஹிக்மா முன்பள்ளியின் இரண்டாம்மாடி கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் தலைமயில் (11) இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில்,
எமது நாட்டில் பாலர் பாடசாலைகளை பொருத்தமட்டில் இன்னும் குடிசைகள் போன்ற அமைப்பில்தான் காணப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த பாரிய கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.தாஹிர் மற்றும் முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து பாரிய முயற்சியினை எடுத்து இதை செய்திருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.
இவ்வாறான பெருந்தொகை நிதி ஒதுக்கீட்டினை எதிர்கால குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்திய நிந்தவூர் பிரதேச சபைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த பாலர் பாடசாலையின் ஆசிரயர்கள் திறமையான கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும், கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளருமாகிய என்.மணிவண்ணண், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தன, அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.அஷரப் தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் லதீப், பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஷாஹிர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் பொது மக்களென பலரும் கலந்து கொண்டனர்.