வானமும் வசப்படும்
-கௌசி-
பேராசிரியர். பாரதி கெனனடி அவர்களால் தயாரிக்கப்பட்டு , திரு.கிரேசியன் பிரசாந்தினால் இயக்கப்பட்ட ” கலாட்டா பேரின்ப சுற்றுலா” எனும் திரைப்படம் வருகின்ற 29ம் திகதி மட்டக்களப்பு “விஜயா திரையரங்கில்” திரைக்கு வருகிறது. அனைவருக்கும் கல்வி என்கின்ற மைய அணுவை கொண்டு வெளிவரும் ” கலாட்டா பேரின்ப சுற்றுலா” பாடசாலை பிள்ளைகளின் ஆற்றல்களால் பூரணமடைந்து திரைக்கு வருகிறது.
திரைக்கதை பற்றியோ, திரை இயக்கம் பற்றியோ அல்லது இன்ன பல தொழிமுறை சார் நுட்பங்கள் பற்றியோ நான் இங்கு பேச முனையவில்லை. இங்கு பேச முனைவதெல்லாம் இவை அனைத்துக்கும் அடிநாதமான ” தன்னம்பிக்கைகள் ” பற்றியவை. குறும்பட முயற்சிகளை , பெரும் திரைக்கு மாற்றும் பரிணாம வளர்ச்சியின் உந்துதல்கள் பற்றியவை .
ஈழத்தமிழர்கள் காலத்துக்கு காலம் பெரும் வீச்சொன்றை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர்கள். பழமை மீறலும் புதுமை கொள்ளலும் அவர்களின் போக்கு. 70 களின் பின் தமிழ் இலக்கிய பரப்பில் அவர்கள் நிகழ்த்திய வீச்சு மிக அற்புதமானது. அது தமிழ்நாட்டு இலக்கிய கருப்பொருட்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. உலகத்தரம் வாய்ந்த போரியல் இலக்கியங்களை அவர்கள் படைத்தனர். புலம்பெயர் தமிழர்கள் போரியல் வாழ்வு சார்ந்து பிறிதொரு தளத்தில் இலக்கியம் படைத்தனர்.
இத்தகய பின்னணியில்தான் இந்த திரைப்பட முயற்சியை நான் காண விரும்புகிறேன். எங்கள் பிள்ளைகள் நம் தலைமுறையை விட திரைப்பட துறையில் பன்மடங்கு வீச்சில் பாய திறன் கொண்டவர்கள். அவர்கள் நவீன இலத்திரனியல் பொருட்களை கையாளும் விதங்கள் மிகவும் லாவகரமானவை. கையடக்க தொலைபேசியின் வசதிகளுக்குள் குறும்படங்களை சுருக்கும் அவர்களின் திறமை அலாதியானது. வியாபித்து கிடக்கும் சமூக ஊடகமெங்கும் அவர்களின் புகைப்பட கலையின் புது வீச்சுகள் ஆக்கிரமித்து கிடக்கின்றது.
பெருங் கதாநாயக படையெடுப்புகளுடன் மிகப்பெரும் நிதி மூலங்களுடன் எங்களூர் திரையரங்குகளை தன் வசப்படுத்தும் இந்திய பெரும் சினிமாக்களின் இடையேதான் இத் திரைப்படத்தினால் நம்மூர் திரையரங்கின் கதவினை தட்ட முடிந்திருக்கின்றது. பெரும் வணிக படையெடுப்புகளுக்கு இடையே நமக்கான களத்தை திறக்க முனைந்திருக்கும் தயாரிப்பாளர் , இயக்குனர் , திரையரங்கு உரிமையாளர் போன்றவர்களுக்கு நமது வாழ்த்துக்கழும் , பாராட்டுதல்களும் உரித்தாகட்டும். இது ஒரு நம்பிக்கையூட்டும் முயற்சி. எங்கள் திரையரங்குள் இனி எங்கள் வசமாகும் காலங்கள் மலரட்டும் . எங்கள் வானில் எங்கள் நட்சத்திரங்கள் மிளிரட்டும்.
திரைப்படத்திற்கான நுழைவுசீட்டு ஒன்றை கொள்வனவு செய்வதன் மூலம் உங்கள் ஆதரவை எங்கள் பிள்ளைகளுக்கு தெரிவியுங்கள்.
