இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!
கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(13.06.2023) மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் டபிள்யு.டி. வீரசிங்க தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அரசியல் பிரமுகர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், அரச உயர் அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு அபிவிருத்திக் குழுவினால் அனுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன.
இக்கூட்டத்தில் மிக முக்கிய விடயமாக கல்முனை தமிழ் கலாச்சாரப் பேரவை குறித்தும் அதற்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட காணிக்குள் மண் நிரப்புவதற்கு கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் மறுப்புத் தெரிவித்து வருகின்ற விடயம் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனால் சுட்டிக் காட்டப்பட்டு அதற்கான அனுமதியும் கோரப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் தெரிவிக்கையில், கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் தொடர்பிலான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுவதால் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவிக்கையில், கல்முனை தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அடக்குமுறை பலவற்றிற்குள் அரசியல்வாதிகளாலும், அரச அதிகாரிகளாலும் உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.
இதற்கு முன்பும் பல்வேறு விடயங்கள் இவ்வாறு இடம்பெற்று வந்திருக்கின்றன. தற்போது கல்முனை தமிழ் கலாச்சாரப் பேரவையின் காணிக்கு மண் இட்டு நிரப்பும் விடயத்தில் இவ் அடக்குமுறை கையாளப்பட்டு அக்காணி நிரப்புவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வருகின்ற என தெரிவித்துள்ளார்.
இல்லாத காணிக்கு எவ்வாறு மண் இடுவது
இதன் போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ், கல்முனை கலாச்சாரப் பேரவைக்கு காணி இல்லை எனவும், இல்லாத காணிக்கு எவ்வாறு மண் இட்டு நிரப்புவதற்கு அனுமதி கொடுக்க முடியும் என்றும், அவ்வாறு அனுமதி கொடுக்கப்படக் கூடாது என்றும், நிரப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கருத்து தெரிவிக்கையில், கல்முனை தமிழ் கலாச்சாரப் பேரவைக்கு காணி வழங்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அரச நிர்வாக ரீதியான சகல ஆவணங்களையும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இவை தொடர்பில் ஆராய்ந்த கிழக்கு மாகாண ஆளுநர், தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது கல்முனை தமிழ் கலாச்சாரப் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்ற காணிக்கு மண் இட்டு நிரப்புவதற்கான அனுமதியைக் கொடுக்க முடியும் எனவும், இவ்விடயத்திற்கு விரைவாக ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.