கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை.!
(ஏயெஸ் மெளலானா)
நாட்டில் மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லையினுள் நாளை 08 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக மாடு அறுப்பது தடை செய்யப்படுவதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.
தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சில மாடுகள் கல்முனை பிராந்தியத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அது ஏனைய மாடுகளுக்கு விரைவாக பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதனாலும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி மக்களின் நுகர்வுக்கு உகந்ததல்ல என்றும் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லையினுள் குறித்த காலப்பகுதியில் மாடு அறுத்தல், மாட்டிறைச்சியை விற்பனை செய்தல் மற்றும் மாட்டிறைச்சிறைச்சியை பொதி செய்தல் என்பா தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்தடை உத்தரவை மீறி செயற்படுகின்ற மாட்டிறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.