யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது !
பா.அரியநேத்திரன் மு.பா.உ.
யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது என்பதை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தெளிவாக காட்டுகிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத்தமிழரசு கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அவரின் கைது தொடர்பாக மேலும் கூறுகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (07/06/2023) காலை கொழும்பில் அவரின் இல்லத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார் அவர் பாராளுமன்றில் உரையாற்றுவதாக இருந்த நிலையில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் வேளையில் திடீரென இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருப்பது கவலையான விடயம்.
அதுவும் கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்கு சென்று அவரை ஒரு கொலை குற்றவாளியை போன்று கைதுசெய்யப்பட்டுள்ளமை ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்பதை அவதானிக்கமுடிகிறது.
ஏற்கனவே கஜேந்திரகுமார் வெளிநாடு செல்லமுடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது அப்படியான நிலையில் அவர் நாட்டைவிட்டு தப்பிச்செல்லும் எந்த தேவையும் அவருக்கு இல்லை.
அவர் குற்றம் செய்தவர், குற்றம் செய்யவில்லை என்பதற்கு அப்பால் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சுதந்திரமாக கருத்து கூறுவதற்கோ, கூட்டங்களில் பங்குபற்றி தமது கருத்துக்களை கூறுவதற்கோ முடியாத நிலையை ஒரு மக்கள் பிரதிநிதிக்கு ஏற்பட்டுள்ளதானது எதிர்காலத்தில் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நிலைமை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இவ்வாறான நிலைமை தொடராமல் தற்போதய ஜனாதிபதி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் கூறினார்.