ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை பாதுகாப்பதாக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மீது பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எரிவாயு, வெள்ளைப்பூண்டு மோசடிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்திய நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்தன இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கை ஊடகமொன்றுக்கு இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாரியளவிலான ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்கள்
நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்கள் தம்மிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்களுடன் அவற்றை நிரூபிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பந்துல குணவர்தன வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் பாரியளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் அமைச்சர்
மோசடிகளில் ஈடுபட்ட நபர்களை தனது சுயலாபத்திற்காக அமைச்சர் பந்துல பாதுகாத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினருக்கு குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தகவல்கள் வழங்கிய போதிலும் அது குறித்து இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கப்பட முடியாது என தெரிவித்துள்ளார்.