அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் சமூக செயற்பாட்டாளர் திரு.தாமோதரம் பிரதீவன் தலமையில் 2023.05.16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாக்காலில் நடந்த அவலங்களைத் தாங்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்துகின்ற நிகழ்வும் அதனை தொடர்ந்து 17 ஆம் திகதி இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு கலந்து கொண்டிருந்த மதகுருமார் அரசியல் தலைவர்களுடைய உரையும் அதனைத் தொடர்ந்து கஞ்சி வழங்குகின்ற செயற்பாடும் சிறப்பாக பாண்டிருப்பில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிகழ்விலே கிழக்கு மாகாண இந்துக்குமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ.கு. லோகநாதன் குழுக்கள் தலைமையிலே சுமார் 15 மதகுருமார்களும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தவராசா கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் .திரு.பா.அரியநேந்திரன், .திரு.ஞா.ஸ்ரீ நேசன் ஆகியோரும் அம்பாறை மாவட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் .திரு.க கோடீஸ்வரன் அவர்களும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் தலைவர் திரு.சிவயோகநாதன் சீலன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் திரு.தாமோதரம் பிரதீவன் மற்றும் காரைதீவுப் பிரதேச சபையினுடைய முன்னாள் தவிசாளர் திரு.கி.ஜெயசிறில் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திருமதி.தர்ஷினி பார்த்தீபன் போன்றவர்களும் கலந்து கொண்டிருந்ததோடு அதிகளவிலான பொது மக்களும் இளைஞர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி அருந்தி அதை வீதியிலே சென்ற மக்களுக்கும் பகிர்ந்து வழங்கி முள்ளிவாய்க்கால் அவலத்தைப் பற்றி எடுத்துரைத்துக் கொண்டு இருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.