வடக்கு, கிழக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று பதவியேற்றனர்!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரே புதிய ஆளுநர்களாக பதவியேற்றனர்.
முன்னதாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.
வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட ஆகியோர் இதற்கு முன்னர் பதவிகளை வகித்து வந்தனர்.