இந்த வருட இறுதிக்குள் இரண்டு தேர்தல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், அடுத்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தேர்தலை நடத்துவது தொடர்பாகச் சர்வதேச நாணய நிதியத்துக்கும்இந்தியாவுக்கும் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார் என்றும் ஜனாதிபதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு வாக்குறுதி
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா அவ்வப்போது இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றது.
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் உதவி தொடர்ச்சியாகத் தேவை என்பதால் அந்த நாட்டின் கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலையில் இலங்கை அரசு உள்ளது.
இதனால் இந்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்தியது போல் துண்டு துண்டாக அந்தத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறியமுடிகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு வாக்குறுதி
அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலை முதலில் நடத்தும் திட்டம் ரணிலிடம் உள்ளது என அரச தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.