எதிர்கால தலைவர்களாக மிளிரவிருக்கின்ற மாணவ சமுதாயத்தின் கல்வி நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாமென மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் உருக்கமான வேண்டுகோலொன்றினை அறிக்கை ஒன்றின் ஊடாக முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் கடிதத்தலைப்பில் அதன் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது, கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதி தமது கல்வி நடவடிக்கையின் அடுத்த கட்ட இயங்குதலுக்காய் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி நடந்து முடிந்த உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணி காலதாமதமாகாமல் கையாளுதல் மிகவும் அவசியமானதாகும்.
ஏற்கனவே உயர்தர பரீட்சையும் தாமதித்து நடைபெற்றுள்ள நிலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை தாமதப்படுத்தல் எமது மாணவ சமுதாயத்தின் கல்வி நடவடிக்கைக்கு குந்தகமாய் அமையும் என்பதை எமது அமைப்பு மிக வேதனையோடு தெரிவித்து நிற்கின்றது.
எனவே அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணியோடு தொடர்புபட்ட அத்தனை நல்லுள்ளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சும் எமது இளம் தலைமுறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை துரிதப்படுத்தி மாணவர்களுக்கு உதவி புரியுமாறு மக்கள் சார்பாக “மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு” அன்பாய் வேண்டிநிற்கிறது என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.