பாறுக் ஷிஹான்
கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம்
சித்திரை புதுவருட கொண்டாட்டம் கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள இவ்விரு பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்ற பல்வேறு விளையாட்டு நிகழ்விலும் பொதுமக்கள் அதிகளவில் பங்குபற்றி இருந்தனர்.
வெள்ளிக்கிழமை(28) காலை முதல் இரவு வரை இக்கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் மரதன் ஓட்டம், மாவுக்குள் காசு எடுத்தல், தேசிக்காய் ஓட்டம், முட்டி உடைத்தல்,சாக்கு ஓட்டம்,பலூன் உடைத்தல்,கயிறு இழுத்தல்,சங்கீதக் கதிரை,பின்னோக்கி ஓடுதல்,சமனிலை ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
குறித்த சித்திரை புதுவருட கொண்டாட்டமானது பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் சிறப்பாக இடம்பெற்றது.
இதே வேளை மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையில் சித்திரை புதுவருட கொண்டாட்டமானது சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
மேலும் இவ்விரு பொலிஸ் நிலைய தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டமானது பொலிஸ் நிலைய ஆலோசனை குழு சமூக பொலிஸ் சேவை குழுக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் .பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்கவிற்கு விசேடமாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஆலோசனைக் குழு பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அதிதிகளாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக , பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.












