2019 ஏப்ரல் 21 இல் இலங்கை குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிமினால். ஈர்க்கப்பட்டவரே 2022 ஆம் ஆண்டு தமிழகம் கோயம்புத்தூரில் சிற்றூந்து வெடிகுண்டு வெடிப்பை நடத்தியவர் என்று இந்திய தேசிய புலனாய்வு பிரிவு கூறுகிறது.
கோவையில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிற்றூந்து வெடிப்பில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஜமீஷா முபீனுடன் தொடர்புடைய 6 பேர் மீது இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவு நேற்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பழமையான அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் அருகில் கடந்த அக்டோபர் 23ம் திகதி இந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
ஜமேஷா முபீன் ஓட்டிச் சென்ற சிற்றூந்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் சாதனம் கோயிலுக்கு முன்பாக வெடித்துச் சிதறியது. இதன்போது முபீன் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலை நடத்துவதற்கு முபீன் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அவர் இதற்காக விசுவாசப் பிரமாணம் எடுத்ததாகவும் தேசிய புலனாய்வுப்பிரிவின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட முபீனின் நண்பரான முகமது அசாருதீனிடமிருந்து மீட்கப்பட்ட “பென் டிரைவ்“, முபீனின் காணொளிப் பதிவுகளைக் கொண்டிருந்தது.
அதில், அவர் தன்னை தௌலத்-இ-இஸ்லாமியா (அல்லது இஸ்லாமிய அரசு) உறுப்பினராக அடையாளப்படுத்தியிருந்ததாகவும் இந்திய புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
முபீன், ‘காஃபிர்களுக்கு’ அதாவது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி, தியாகியாக வேண்டும் என்ற தனது நோக்கத்தைப் பற்றி அதில் விரிவாகப் பேசியிருந்தார்.
அத்துடன் முபீனின் வீட்டிலிருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகளை மீட்டதாக இந்தியப் புலனாய்வுப்பிரிவு கூறியுள்ளது.
அதில் இஸ்லாமிய சட்டங்களுடன் ஒத்துப்போகாத தற்போதைய ஜனநாயக அமைப்பு பற்றியும் விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசு அலுவலக கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள்,தொடருந்து நிலையங்கள் மற்றும் சில உள்ளூர் கோவில்கள் உள்ளிட்ட ‘இலக்குகள்’ பற்றிய குறிப்பும் அதில் இருந்ததாக ஏஎன்ஐ என்ற இந்திய புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய ஸ்டேட் ஆஃப் கொராசன் அரசின் இணைய இதழான ‘வொய்ஸ் ஒஃப் கொராசன்’ இதை உறுதிப்படுத்தியது.
‘பசு மற்றும் எலிகளை வழிபடும் அசுத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய ஸ்டேட் ஆஃப் கொராசன் அரசின் (ஐஎஸ்கேபி) என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
முபீனுக்கு ஆயுதங்களை ஏற்பாடு செய்வதில் நண்பர்களான முகமது அசருதீன், முகமது தல்ஹா, ஃபரோஸ் கான், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் உதவினார்கள்.
ஃபரோஸ், ரியாஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் சிற்றூந்தில் வெடிபொருட்கள் மற்றும் எரிவாவு கொள்கலன்களை ஏற்றி. அதை சக்திவாய்ந்த வெடி ஆயுதமாக மாற்றினர்.
இதேவேளை இஸ்லாமிய அரசின் திட்டங்களைப் பற்றி விவாதிக்க இலங்கையின் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் மற்றொரு இலங்கை குண்டுதாரி – முகமது அசான் ஆகியோர் 2017 மற்றும் 2018 இல் இந்தியாவுக்குப் பயணம் செய்தனர் என்றும் இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவு தமது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.