கல்முனை மாநகர பிரதேசங்களில் டியூசன் வகுப்புகள் இடைநிறுத்தம்.!
(சாய்ந்தமருது செய்தியாளர்)
தமிழ், சிங்கள புது வருட பண்டிகை மற்றும் ரமழான் நோன்பு மற்றும் உஷ்ணமான காலநிலையைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர எல்லையினுள் அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான அனைத்து டியூசன் வகுப்புகளையும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தற்காலிகமாக கல்முனை மாநகர சபை அறிவுறுத்தலுக்கமைய இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் நடத்துனர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதுடன் இக்கடிதத்தின் பிரதிகள் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர், கல்முனை, சாய்ந்தமருது மற்றும் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் புனித நோன்பு மற்றும் தமிழ், சிங்கள புது வருடப் பிறப்பு போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளினைக் கொண்ட இம்மாதமானது அதிக உஷ்ணம் நிறைந்ததாக காணப்படுகின்ற போதிலும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பொருத்தமற்ற நேரங்களில் தொடர்ச்சியான வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருவதானது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சிரமங்களை ஏற்படுத்துவதாக சமய, பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.
அத்துடன் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறான நியாயமான காரணங்களினை கருத்தில் கொண்டே கல்முனை மாநகர சபையினால் டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறும் கோரும் இவ்வறிவுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் குறித்த காலப்பகுதியில் இவ்வகுப்புகளை தற்காலிகமாக இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் மாநகர ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.