வரிப்பணத்தில் பாரிய மோசடி
வரிப்பணத்தில் பாரிய மோசடி
கல்முனை மாநகர சபையில் நடந்தது என்ன…?
** ஊர்வாதத்தை கிளப்பி ஊழலை மறைக்க முயற்சி
( முயலகன் )
கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்ட வரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா காணாமல் போன விடயம் கடந்த பெப்ரவரி மாதம் அம்பலமாகியது. இதனை அடுத்து சமூக ஊடகங்களிலும் துண்டு பிரசுரங்கள் ஊடாகவும் பல்வேறு விமர்சனக் கருத்துக்கள் வெளியாகி இருந்தன.
கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சேவை வழங்கும் ஒரு அரச நிறுவனம் என்ற ரீதியில் சீரான சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்பதே எமது இந்த கட்டுரையின் எதிர்பார்ப்பாகும்.
2023.02.01ஆம் திகதி கல்முனை மாநகர சபை எல்லைக்குள் வாகனத் தரிப்பிட சேவையினை மேற்கொள்வதற்காக செலுத்தப்பட்ட 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான KMC/RE/23/056086 எனும் இலக்க பற்றுச்சீட்டு எந்தவித அனுமதியுமின்றி இரத்து செய்யப்பட்டதன் ஊடாகவே இந்த நிதி மோசடி தெரியவந்துள்ளது.
வாகனத் தரிப்பிடத்திற்கான கோவையில் இந்த குத்தகைப் பணம் வரவு வைக்கப்பட்டு கட்ட வேண்டிய தொகையிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. எனினும், மேற்படி சேவைப் பெறுநருக்கு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதன் பிற்பாடு அத்தொகையானது கணக்கிற்கு வரவு வைக்கப்படாமல் இரத்து செய்யப்பட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இது போன்று மாநகர சபையின் வருமானமும் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.
இவை போன்று, கல்முனை மாநகர சபையின் பெயரில் 2020.01.01ஆம் திகதி தொடக்கம் 2023.02.15ஆம் திகதி வரையான 38 மாதங்களுக்குள் வழங்கப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 2,709 பற்றுச்சீட்டுகள் உரிய அதிகாரிகளின் எந்தவித அனுமதியுமின்றி TaxMan எனும் மென்பொருளின் ஊடாகவே இரத்துச் செய்யப்பட்டுள்ள விடயம் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
அது மாத்திரமல்லாமல், உள்ளீடு செய்யப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட பற்றுச்சீட்டுக்களின் 830 தரவுகளில் வருமான வரிக்கோவை இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் 892 புதிய வரிக் கோவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த மென்பொருளில் காணப்பட்ட பல அடிப்படைத் தரவுகளில்; அட்மின் கடவுச்சொல்லினைப் (Password) பயன்படுத்தி பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நிதிப் பிரிவில் பணியாற்றிய இருவர் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விளக்க மறியல் காலம் 14 நாட்கள் முடிவடைந்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது,போலீஸ் தரப்பினர் இன்னும் விசாரணைகள் முடிவடையவில்லை என நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து விளக்கமறியல் இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
“நிதிப் பிரமாணங்களின் அடிப்படையில் அரச நிறுவனமொன்றில் ஒரு பற்றுச்சீட்டு இரத்து செய்யப்பட்டிருப்பின் அது சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு கோவைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
எனினும்,கல்முனை மாநகர சபையில் இரத்துச் செய்யப்பட்ட பற்றுச்சீட்டுகளில் எவையும் அவ்வாறு காணப்படவில்லை” என கணக்காளர் தலைமையிலான குழு இதன்போது சுட்டிக்காட்டியிருந்தது. மாகாண கணக்காய்வு திணைக்களத்தினால் கல்முனை மாநகர சபைக்கு மாதம் இரு முறை கணக்காய்வுக்காக வந்தும், கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வந்த இந்த நிதி மோசடியினை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டிய கல்முனை மாநகர சபை,அதன் நிருவாகம் குறித்த நிதியை கையாளும் விடயத்தில் அலட்சியப் போக்கோடு செயல்பட்டு இருக்கிறதா? அல்லது திட்டமிடப்பட்ட கவனயீனமா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், இங்கு கடமையாற்றும் நிர்வாக அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை வைத்துக்கொண்டு குறித்து அந்த கிராமத்தையோ அல்லது அந்த பிரதேசத்தயோ பாதிக்கின்ற வகையில் பிரதேசத்தில் வசிக்கின்ற பதவி நிலை அதிகாரிகளை மையப்படுத்தி சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுவது குறித்த பிரதேசத்தில் வசிக்கும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி நிறுவனங்கள் அரச நிறுவனங்களாக காணப்பட்டாலும், கிராம மட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட ஒரு அரசியல் சபையோடு நிறுவப்படுகின்ற நிறுவனங்களாகும். இங்கு நிர்வாக முறைமையை சீராக முன்னெடுப்பதற்காக அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். அரசியலுக்கு அப்பால் பொதுமக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்
கல்முனை மாநகர சபையில் ஊழல் மோசடி குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் சூழலில், அரசியல் சாயம் பூசி,பிரதேச வாத கருத்துக்களை தவித்து, கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் ஓர் உள்ளாட்சி மன்றமாக மாற்றப்பட வேண்டியது பொதுமக்களாகிய எமது கடுமையாகும்.