வவுனியா வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்தை மதவெறியர்களால் உடைக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பாக வண்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாக நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயம் தொடர்பாக தொடர்ந்தும் பல சிக்கல்களை திட்டமிட்ட அடிப்படையில் ஒரு சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்றைய நிலைமை எற்பட்டிருக்காது.
இந்த ஆதி சிவன் ஆலயமானது காவல்துறையினர் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்துள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில் இந்த ஆலயம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய நடவடிக்கைகளையும் விளக்கத்தையும் இந்த இரண்ட தரப்பினர் வழங்க வேண்டும்.
இலங்கையில் தற்பொழுது எற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக நாம் பல நாடுகளுடனும் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருக்கின்றோம்.
உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரிப்பதற்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடத்து வருகின்றோம் இவ்வாறான ஒரு நிலையில் இந்த சம்பவங்கள் எங்களுடைய நாட்டிற்கு அவப் பெயரை ஏற்படுத்தக்கூடும்.
எனவே னாதிபதி உடனடியாக தலையிட்டு இதனை முடிவிற்கு கொண்டு வர வேண்டும். இந்த நாட்டில் ஏனைய மத ஸ்தலங்களுகக்கு கொடுக்கின்ற அந்த கௌரவத்தையும் மரியாதையையும் இந்த மதத்திற்கும் வழங்க வேண்டும். உடனடியாக இந்த ஆலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஏனைய மத ஸ்தாபனங்கள் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுக்கின்ற பொழுது விரைந்து நடவடிக்கை எடுக்கின்ற காவல் துறையினர் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்படுகின்ற பொழுது அவ்வாறு நடந்து கொள்வதில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் இருக்கின்றது.
எனவே இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு.
இதற்கு உடனடியாகஜனாதிபதி தலையிட்டு அங்கு இந்துக்கள் சென்று வழிபடுவதற்கும் நாள்தோறும் பூஜைகளை நடாத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த விடயத்தில் அனைத்து இந்து அமைப்புகளும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து இந்து உறுப்பினர்களும் ஏனைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு இந்த அரசாங்கத்திற்கு அலுத்தம் கொடுக்க முன்வரவேண்டும்.
இதனை முறையாக கையாளவிட்டால் தேவையற்ற பிரச்சினைகளுக்கு நாம் அனைவருமே முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமை எற்படலாம்.
மேலும் இந்துக்கள் அனைவரும் இதனை பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பதாக மாத்திரம் அரசாங்கம் தப்பான இடைபோட்டுவிடக் கூடாது என்பதையும் சம்பந்தப்பட்ட அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வர விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
