கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2023.03.15 திகதி அன்று கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் முதலாம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான களவிஜய நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வரவேற்புரையினையும் அறிமுக உரையினையும் வைத்தியசாலை பணிப்பாளர் Dr.இரா. முரளீஸ்வரன் நிகழ்த்தினார்.தனது உரையில் கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் வணக்கத்திற்குரிய அருட்சகோதரர் சந்தியாகு அவர்களையும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் திரு. T. தேவஅருள், தாதிய பரிபாலகர், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் அங்கு கலந்து கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களையும் வரவேற்றதோடு, மேலும் அவரின் உரையில், வைத்தியசாலை என்பது மருந்துகளை மட்டும் வழங்கும் நிறுவனமாக அல்லாமல் உடல், உள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கூடிய நிறுவனமாகும். இதற்காக வைத்தியசாலை பல்வேறு வகைப்பட்ட கட்டமைப்புகளை கொண்டு இயங்குகின்றது.
மற்றும் இங்கு வரும் நோயாளிகளுக்கான சிகிச்சை ஒரு குழு நடவடிக்கையாக இடம்பெறுகிறது எனவும் இதன்போது வைத்திய நிபுணர்கள் முதல் சுத்திகரிப்பு பணியாளர்கள் வரை இவ் வைத்தியசாலையின் சிறந்த சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கின்றார்கள்.
உயர்தர முதலாம் ஆண்டு மாணவர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் கொண்டு செல்லவும், வைத்தியசாலை சேவைகள் பற்றிய அறிவை பெறவும், இந்த காலகட்டத்தில் கல்வியில் உள பிரச்சினைகள் ஏற்படும் வேளைகளில் அவற்றிற்கான தீர்வு கிடைக்கும் இடமாகவும் வைத்தியசாலை இடம்பெருகிறது எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து வைத்தியசாலை தர முகாமைத்துவ பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் திரு. P. செல்வகுமார் அவர்களால் வைத்தியசாலை பற்றிய சுருக்க நிகழ்த்துரை வழங்கப்பட்டது.
நிகழ்த்துரையில் வைத்தியசாலை வரலாறு பற்றியும் வைத்தியசாலையின் 44 பிரிவுகள், 14 சாய்சாலைகள் (Clinics) பற்றிய தெளிவூட்டலும், வைத்தியசாலை இடம்பெறுகின்ற நிகழ்வுகள் மற்றும் வைத்தியசாலை பெற்றுக்கொண்ட விருதுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் வணக்கத்திற்குரிய அருட்சகோதரர் சந்தியாகு அவர்களால் சிறப்புரை வழங்கப்பட்டது.
அவரின் உரையில் இவ்வாறான வைத்தியசாலை களவிஜயத்தை மெற்கொள்ள உதவிய வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு நன்றியை தெரிவித்தது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு இவ்வாறான பயனுள்ள இந்த செயற்பாடுகளை நடத்துவது உண்மையில் பாராட்டதக்கது எனவும் பாடசாலை சார்பாக வைத்தியசாலைக்கும் தனது நன்றியை தெரிவித்து அவரது உரையை நிகழ்த்தி சென்றார்.
அடுத்ததாக வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர் திரு. N. சசிதரன் தனது உரையில் மாணவர்களாகிய நீங்கள் எதிர்கால தில் சிறந்து விளங்க வேண்டுமென்று சிறுகதை மூலமாக சிறந்த பயனுள்ள விளக்கத்தினை கூறினார்.
மேலும் வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் திரு. T. தேவஅருள் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. அவர் தனது உரையில் உயர்தர முதலாம் ஆண்டு மாணவர்களாகிய உங்களின் அறிவு, ஆற்றல் வளர இவ்வாறான களவிஜயம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சில பயிற்சி நெறிகள், அறிவுரைகள், வைத்தியசாலை சம்மந்தப்பட்ட விடயங்கள் மாணவர்களாகிய உங்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வுகள் உங்களால் அவர்களுக்கு சென்றடைய வேண்டும் எனவும், உண்மை சம்பவங்களை தெளிவாக விளங்கிக்கொண்டு அந்த சம்பவத்தின் உண்மை தன்மை மாறாமல் மற்றவர்களுக்கு கூற வேண்டும் என்று சிறுகதை மூலம் தெளிவுபடுத்தி அவரது உரையை முடித்தார்.
மாணவர்கள் சார்பாக ஒருவர் உரையை நிகழ்த்தினார். அவர் தங்களுக்கு இந்த களவிஜயம் பயனுள்ளதாக அமைந்ததாகவும், ஏனைய அனைத்து விதத்திலும் உதவிய வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை தெரிவித்ததோடு களவிஜயத்தை நிறைவு செய்த பிற்பாடு பாடசாலை நிர்வாகம் சார்பாக ஒரு நினைவுப்பரிசும் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.